விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
ஆனந்த விகடனில் எண்பதுகளில் தொடராக வந்த நாவல் இது. ராம்குமார் & சுகந்தா, லிஸா & ரோஸி என்ற நான்கு பேரைச் சுற்றி இந்த நாவல் நகர்கிறது. ராம்குமாரது வாழ்க்கையில் மூன்று பெண்கள் குறுக்கிடுகிறார்கள். மூவருமே அவனை விரும்புகிறார்கள். ஒருத்தியை (சுகந்தா) அவன் மனதாரக் காதலிக்கிறான்; ஒருத்தி (லிஸா) மேல் அவனுக்கு லேசாக சபலம் ஏற்படுகிறது, ஒருத்தியை (ரோஸி) அவன் தன் மகளாக பாவிக்கிறான்.
மூவருடனான தனது உறவுநிலையைத் தெளிவாக வரையறுத்துக் கொள்ளும் ராம்குமார், அந்த எல்லைக்குள்ளேயே அவர்களுடன் பழகி வருகிறான். அதை மீறுவதற்கு பல சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதிலும் அவன் தனது நிலைப்பாடில் தெளிவாக & உறுதியாக நிற்கிறான்.
ராம்குமாருக்கு இன்னொரு முகமும் உண்டு. அவன் சின்னச் சின்ன பொய்கள் சொல்லக் கூடியவன். திட்டமிட்டெல்லாம் அதை அவன் சொல்வதில்லை என்றாலும், வாழ்க்கையை சுவாரஸ்யமாக்கிக்கொள்ள அவனுக்கு அந்தப் பொய்கள் தேவைப்படுகின்றன. ஆனால், ஒரு கட்டத்தில் அந்தப் பொய்யே அவனுடைய வாழ்க்கையை நிலைகுலையவும் வைக்கிறது. அதற்குப் பிந்தைய இந்த நிகழ்வுகளை ராம்குமார் நினைத்துப் பார்ப்பதாக இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது.
விகடன் மூலம் பரந்துபட்ட தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமான ஸ்டெல்லா புரூஸின் சிறந்த நாவல் இது. சிறந்த எழுத்தாளர்கள் தங்களது நூல்களது மூலம், தங்களுக்குப் பிந்தைய எண்ணற்ற தலைமுறைகளுடன் தொடர்ந்து பேசிவருகிறார்கள். ஸ்டெல்லா புரூஸும் அத்தகைய ஓர் எழுத்தாளர்தான்; இந்த நூலும் அத்தகைய ஒரு நூல்தான்.