விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
சங்கீத மும்மூர்த்திகளில் இளையவரான முத்துசுவாமி தீட்சிதர், போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லாத கால கட்டத்தில் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை பயணம் செய்தவர். ஒரு க்ஷேத்திரம் விடாமல் விஜயம் செய்து தரிசித்து, தான் தரிசித்த மூர்த்திகள் மீதெல்லாம் ராக பாவத்துடன் பாடல்கள் புனைந்து சரித்திரம் படைத்த சங்கீத சாதனையாளர்!
பல ஆண்டுகளுக்கு முன் ஆனந்த விடனில் தொடர் எழுத பரணீதரன் காசியாத்திரை மேற்கொண்டபோது, தீட்சிதர் ஐந்தாண்டு காலம் காசியில் தங்கியிருந்ததைப் பற்றி அறிந்தார். அங்கு தீட்சிதர் ஆராதித்ததாகக் கூறப்படும் சிவலிங்கத்தையும் தரிசித்தார். அதன் பிறகு அந்த மகானின் வாழ்க்கை வரலாற்றை அறிய வேண்டும் என்ற ஆவல் அவருக்கு ஏற்பட்டது. விளைவு, சென்னை திரும்பியதும் அதற்கான முயற்சிகளில் முழு வீச்சில் ஈடுபட்டார். அதையொட்டி தீட்சிதர் பயணம் செய்த திருத்தலங்களை விசாரித்து அறிந்து, அந்த இடங்களுக்கெல்லாம் விஜயம் செய்தார். பின்னர் அந்தந்த இடத்தில் கிடைத்த, நம்பத் தகுந்த தகவல்களது அடிப்படையில் அவரது வாழ்க்கை வரலாற்றையும் அதையொட்டிய சம்பவங்களையும் இணைத்து விகடனில் எழுதினார்.
அந்தத் தொடர் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். வைத்தீஸ்வரன் கோயிலில் ஆரம்பித்து தீட்சிதர் தரிசித்த கோயில்களுக்கு பரணீதரனுடன் நாமும் ஒரு பயணம் மேற்கொண்ட அனுபவம் இந்த நூலைப் படிக்கும்போது நமக்கு ஏற்படும்.
எந்தக் கோயிலில், எந்தச் சூழலில் தீட்சிதர் தமது கீர்த்தனைகளை இயற்றினார் என்ற விவரங்களுடன் அந்தந்த கோயிலின் தல புராணம், கோயில் சிறப்பு, உற்சவங்கள் மற்றும் ஐதீகங்களையும் தனக்கே உரிய தனி நடையில் அழகுபட வர்ணிக்கிறார் நூலாசிரியர்.
எட்டயபுரத்தில் தீட்சிதரின் இறுதி நாட்களை உணர்ச்சிபூர்வமாக விவரித்து, மீனாட்சி மே முதம் தேஹி மேசகாங்கி... என்று தொடங்கும் பூர்விகல்யாணி ராகக் கீர்த்தனையில் மீனலோசனி பாசமோசனி... என்ற வரியை சீடர்கள் பாடிக் கொண்டிருக்க... ஜகன்மாதாவின் அருளில் தீட்சிதர் ஐக்கியமடையும் காட்சியைப் படிப்பவர்களின் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் நூலாசிரியர்.
தீட்சிதர் பற்றிய இந்த நூல், சங்கீதம் கற்பவர்களுக்கு மட்டுமின்றி, இசை ரசிகர்கள் ஒவ்வொருவரும் படித்து, ரசிக்கும் வண்ணம் அமைந்துள்ளது!