விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
வேடதாரிகளும் போலிகளும் பெருகிவிட்ட ஆன்மிக உலகுக்கு லௌகீகத்தின் இயல்பைப் புரிந்துகொண்ட ஒரு நிதர்சன மனிதன் பிரவேசித்தால் எப்படியிருக்கும்? இந்தக் கேள்விக்கு ஞானகுருவில் பதில் இருக்கிறது. தனக்கு முன் மிதக்கும் இலைகளைக்கூட வாஞ்சையுடன் ஏந்திக்கொள்ளும் காதல் மிகுந்த துறவி இந்த ஞானகுரு!
மடங்களையும் ஆசிரமங்களையும் கட்டிக்கொண்டு ஏமாற்றும் போலிச் சாமியார்களுக்கு நடுவே, ரகசியங்களோ அதிசயங்களோ எதுவும் இல்லாமல் நம்மை நெருங்குகிற புதிய ஆன்மிக அனுபவம் இது.
சாதகமாகவே எல்லாவற்றையும் எதிர்பார்க்கும் மனித இயல்புகளை மீறாத தத்துவ விசாரணைகளைப் பேசும் இந்த ஞானகுரு, விதவிதமான கேள்விகளோடு நெருங்குபவர்களை பரிகசிப்பதில்லை. மாறாக, அவர்களின் பலவீனங்களுக்கு தீர்வுகள் சொல்கிறார். மனிதன் திருப்தியடைகிற மாதிரி நிறைய பதில்களை இவர் வைத்திருக்கிறார். தேடி வருபவர்களைப் பதில்களால் குழப்பி, திரும்பத் திரும்ப தன்னைச் சரணடைய வைக்கும் சிலருக்கு மத்தியில், வாழ்வின் ருசியைக் கற்றுக் கொடுத்து அனுப்பி வைக்கிறார் இந்த ஞானகுரு.
வழிபாடு என்பது அப்படியே பின்பற்றுவதில்லை, பின்பற்றிப் போவதற்கு சரியான வழியைக் கண்டுபிடிப்பது! என்று நமக்குப் புதியதொரு பாதையை அடையாளப்படுத்துகின்றன இந்தக் கட்டுரைகள். ஜூனியர் விகடனில் தொடராக வெளிவந்தபோதே, ஆன்மிகத்தை இப்படியும் அணுகமுடியுமா? எளிமையாக சொல்லக்கூடியதுதானா வாழ்க்கைத் தத்துவங்கள்..? என்ற ஆச்சரியமான கேள்விகளை வாசகர்களுக்கு ஏற்படுத்திய ஞானகுரு, இப்போது நூல் வடிவில்...
நம்மிடம் இன்னும் பதில்களால் நிறைவு பெறாத நிறைய கேள்விகள் இருக்கின்றன. இந்தப் பூமிக்கும் மனிதர்களுக்கும் சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது என்கிற எதிர்பார்ப்போடு வந்திருக்கிற ஞானகுருவிடம் கேட்டால், பதில்கள் உங்கள் விருப்பப்படி கிடைக்கும்!