விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
பெண் _ வாழ்நாளில் எத்தனை அவதாரம் எடுக்கிறாள். ஒவ்வொரு நிலையிலும் அவள் அரிதாரம் பூசும்போதும், அவளுடைய மன உணர்வுகள் எப்படி எல்லாம் மாற்றம் பெறுகின்றன! மகளாக, தாயாக, பாட்டியாக என்று ஒவ்வொரு கட்டத்திலும் அவளுடைய உள்ளத்தில் ஏற்படும் உணர்வுகள் எப்படிப்பட்டதாக உள்ளன! இந்த உணர்வுகளை எல்லோராலும் புரிந்துகொள்ள முடியுமோ? அனுபவித்தவர்கள் வெளிப்படுத்தினாலன்றி அந்த உணர்வுகளை மற்றவர்கள் அறிந்துகொள்வது கடினம்தான்!
ஜனனியில், ஜனனம் செய்திருப்பதும் இப்படிப்பட்ட பெண்களின் மன உணர்வுகள்தான்! நம் நாட்டின் பண்டைய சித்தாந்தங்களில் ஊறிப்போன பெண்ணின் மனது எப்படி இருக்கும்; அந்தக் கட்டுக்களை உதறித் தள்ளிவிட்டு, பெண்ணுக்குத் தேவைப்படும் சுதந்திர உள்ளத்தோடு உலகை அணுகும் மனது எப்படி இருக்கும்?! குழந்தையை விரும்பி, குதூகலத்தோடு உலகை நோக்கும் உள்ளமும், குழந்தையே வேண்டாம் என்ற கருத்தோடு தனித்திருக்கும் பெண்ணின் குமுறும் உள்ளமும் என இந்த நூலில் வேறு வேறு சிந்தனைகள் ஒருமித்து ஜனித்திருக்கின்றன.
சமுதாயத்தின் முக்கியமான பொறுப்புகளில் இருக்கும் பெண்கள், தங்கள் வாழ்க்கையைப் பதிவு செய்து, இந்த சமூகத்தைப் பிரதிபலிக்க முயன்றிருக்கிறார்கள் இந்த நூலில். இதில் ஒரு மகளின் எதிர்பார்ப்புகள் அழுத்தமாகத் தெரிகின்றன. ஒரு தாயின் வேதனையும் ஆசையும் உள்ளத்தை ஊடுருவுகின்றன. தாய்மையின் ஏக்க உணர்வுகள் வெளிப்படும்போதும், கடந்த காலத்தின் நிராசைகளை அசைபோடும்போதும், பெண்ணுக்கான சமூக மதிப்பீடு நம் மனதில் ஆழப் பதிகிறது.
சேஜ் பப்ளிகேஷன்ஸ் ஆங்கிலத்தில் வெளியிட்ட நூலின் தமிழ் வடிவம் இந்த நூல்.