விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
மனிதப் பிறவிக்கு மட்டுமே சிரித்து மகிழும் உணர்வு உண்டு. நகைச்சுவை என்ன நலிந்தோருக்கு அப்பாற்பட்டதா? சில்லரை உள்ளவர்களுக்கு மட்டும்தான் சிரிப்பு சொந்தமானதா? அப்படி ஒரு சிலர் நினைத்தால், அந்த நினைப்பை நிர்மூலமாக்க வேண்டும் என்ற முடிவோடு இந்த நகைச்சுவைக் கதைகளை எழுதியுள்ளார் நூலாசிரியர் அகஸ்தியன்.
நான் டெல்லியில் இருந்தபோது சென்னையில் இருக்கும் என்னுடைய புது வீட்டை வாடகைக்கு விடலாம் என்றெண்ணி, மைத்துனன் தொச்சு அண்டு ஃபேமிலிக்கு என் வீட்டை வாடகைக்கு விட்டேன். வாடகைக்கு விட்ட நாளில் இருந்தே வாடகைக்கு பதிலாக வெறும் கைகளைத்தான் பார்க்க முடிந்தது. வாடகையை கேட்டு நேரடியாகப் போன போது, நீங்கள் கவலைப்படாமல் ஊருக்குப் போங்கோ... நான் எல்லா பாக்கியையும் கொடுத்து விடுகிறேன். என்ன யோசிக்கிறீங்க? போய் இறங்கறதுக்கு முன்னே செக் இருக்கும் என்று சொல்லி, என்னை மேலே பேச விடாமல் அனுப்பி விட்டார்.
டெல்லி திரும்பினேன். தொச்சு அனுப்பிய கவர் வந்தது. மகிழ்ச்சியோடு, செக் வந்திருக்கும் என்று பிரித்தேன். ராசியில்லாத வீடு; வியாபாரத்தில் நஷ்டம் ஆகிவிட்டது. ஆகவே, வீட்டைக் காலி பண்ணுகிறேன்; சாவி எதிர் வீட்டுக்காரரிடம் கொடுத்து இருக்கிறேன். முதலில், நீங்கள் ஆயிரம், இரண்டாயிரம் செலவு பண்ணி, வீட்டில் கணபதி ஹோமம், நவக்கிரக சாந்தி எல்லாம் பண்ணுங்கள் என்று அறிவுரை வழங்கி எழுதி இருந்தார்! இதையெல்லாம் கேட்டால் வீட்டில் பிரளயமே உருவாகும்... என்ன செய்வது, மைத்துனன் ஆயிற்றே!
இப்படியாகத்தானே என் முதல் குடித்தனக்காரர் காலி பண்ணினார். அடுத்த குடித்தனக்காரர் யார் தெரியுமா? வேறு யாருமில்லை. நானேதான்!
_ இதுபோன்ற நகைச்சுவை கலந்த நையாண்டி ததும்பும் கதைகளின் தொகுப்பாக உருவாகியிருக்கிறது இந்நூல்.
இப்படிப்பட்ட சி(ரி)லிர்ப்பூட்டும் கதைகளை அக்கம்பக்கத்தினரையும் படிக்கச் செய்து, சுற்றத்தையும் சூழ்நிலையையும் கலகலவென வைத்துக் கொள்ள இந்நூல் கைகொடுக்கும்.