விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
சட்டையை மாட்டிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே புறப்பட்டுவிட்டால், நாள்தோறும் எத்தனை எத்தனை காட்சிகளை நாம் பார்க்க நேர்கிறது! ஒவ்வொன்றிலும் ஒரு சுவாரஸ்யம் ஒளிந்திருக்கும். பார்த்து ரசித்துவிட்டு அந்தக் கணமே மறந்துவிடுவது சாதாரண மனிதனின் குணம். நகைச்சுவை உணர்வுள்ள சிலரோ அதை சுற்றியிருப்பவர்களிடம் சொல்லி மகிழ்வதுண்டு.
நாள்தோறும் பெறும் அனுபவங்களை நகைச்சுவை உணர்வோடு அணுகி, அவற்றை வெளியில் சொல்லி, மற்றவர்களையும் சிரிப்பில் ஆழ்த்துவது என்பது எல்லோருக்கும் கைவராது. மிகச் சிலரால் மட்டுமே இது முடியும். அந்த மிகச் சிலரில் தமிழ் வாசகர்களுக்கு அதிகம் பழக்கமானவர் பாக்கியம் ராமசாமி.
இவருடைய அனுபவங்களை நகைச்சுவை பாணியில் இந்த நூலில் தந்திருக்கிறார். படிப்பவர்களை வயிறு குலுங்கச் சிரிக்கவைக்கும் இந்தக் கட்டுரைகள், ஏமாற்றங்களைச் சந்தித்த ஒருசிலரின் வாழ்க்கைக் கதையாகவும்கூட இருக்கலாம்.
இந்த அனுபவக் கட்டுரைகளில் சில, படிப்பினைகளைத் தாங்கியுள்ளன. வறட்டு வேதாந்தம் பேசாமல், மனசை லேசாக்கும் நகைச்சுவைத் தன்மையை அவை ஊட்டுவதால், கொஞ்சம்கூட போரடிக்காமல் முழுமூச்சில் படிக்கத் தூண்டி, விலா நோகச் சிரிக்க வைக்கின்றன.
அடுக்குமாடிக்கட்டடங்களில் ஏற்படும் நகைச்சுவைக் காட்சிகள், காய்கறி வாங்க கடைக்குப் போனால் அங்கே ஏற்படும் சில தமாஷ்கள், பணிபுரிந்த அலுவலகத்தில் ஏற்பட்ட குபீர் அனுபவங்கள் என்று பல சிரிப்புச் சந்தங்கள் இந்த நூலில் விரவிக் கிடக்கின்றன.
பணி முடித்து வீட்டுக்கு வந்து அப்பாடா என்று அமரும்போது, இந்தக் கட்டுரைகளை நீங்கள் படித்தால், உங்களுக்குள் உற்சாக ஊற்று வெளிக்கிளம்பி, களைப்பைப் போக்கி சுறுசுறுப்பாக்கிவிடும்.