கோமதி நூலகம், 474, முதல் முக்கிய சாலை, காமராசு நகர், திருவான்மியூர், சென்னை - 41. (பக்கம்: 264).
தமிழகத்தில் 19ம் நூற்றாண்டில் தோன்றிய வள்ளல் பெருமான், வாராது வந்த மாமணியாக நமக்கு விளங்கினார். அவரின் சீலம், பண்பாடு, உயிர்களிடத்தில் இரக்கம் ஆகியவை சான்றோர்களால், பாராட்டப்பட்டு வருகின்றன. அவரையே வழிகாட்டியாக எண்ணி, பல்லாயிரம் பேர் தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றனர். அவர் குறித்த அருமையான ஆய்வு நூலை, நூலாசிரியர் நமக்குத் தந்துள்ளார்.
இந்நூலில், 16 கட்டுரைகள் உள்ளன. வள்ளலாரின் வரலாறும், சென்னைக் கந்தகோட்டம், திருவொற்றியூர், சிதம்பரம் ஆகிய திருத்தலங்களில் அவர் அருளிய சில பாடல்களின் விளக்கங்களும், வள்ளலாரின் சமயக்கொள்கையும், ஆன்மிக நெறியும், அவரின் தத்துவக் கருத்துகளும், ஆன்ம தரிசனமும் அருட்பெருஞ்சோதியும், அருட்பிரகாசரின் அருளியல் அதிசயங்களும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. மரணமில்லா பெருவாழ்வை விளக்குவதும் (பக். 95); அருட்பெருஞ்சோதியை விளக்குவதும் (பக். 107) ஆசிரியரின் அறிவாற்றலுக்கு எடுத்துக்காட்டான பகுதிகளாகக் கொள்ளலாம். மிக்க ஈடுபாட்டுடன் எழுதியுள்ள இந்நூல், வள்ளல் பெருமானுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது.