37, குருவிக்காரன் சாலை, மதுரை - 625 009. (பக்கம்:1112)
சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஜாதி, மதம், இனம், மொழி என்ற எந்த பேதமும் இன்றி அனைவரும் ஓரளவில் நின்று போராடினர். சிறைக் கூடங்களை நிரப்பினர். இறுதியாக நாடு சுதந்திரம் பெற்றது. முஸ்லிம்களுக்கு என பாகிஸ்தான் உருவாயிற்று.இருப்பினும், அகில இந்திய அளவில் பிராந்தியப் பாகுபாடு இல்லாமல் மூலை முடுக்குகளில் எல்லாமிருந்து ஆங்கிலேயர்களை முழு மூச்சாக எதிர்த்து தங்கள் உயிர், உடமைகளை இழந்து, இந்த மண்ணின் விடுதலைக்குப் போராடியிருக்கின்றனர்.
ஆயிரக்கணக்கான இஸ்லாமிய போராளிகள், அவர்களின் தியாகங்கள் வெளிச்சத்திற்கு வரவில்லை.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்களிப்பை மிக மிக விரிவாகவும், சான்றுகளோடும் விளக்கியிருக்கிறார் இந்நூலாசிரியர். மூத்த பத்திரிகையாளரானதால், அரும்பாடு பட்டு தகவல்களைத் தேடி அலைந்து திரட்டி அவற்றைச் சீர்மைப்படுத்தி நூல் வடிவு கொடுக்க அவர் உழைத்த உழைப்பு மிகவும் பாராட்டுதலுக்கு உரியது. 1975ம் ஆண்டு டிசம்பர் 27 தேதியிட்ட, "இல்லஸ்டிரேட்டட் வீக்லி தரும் தகவல் என்ன தெரியுமா? "இந்திய விடுதலைக்காகச் சிறை சென்றவர்களிலும், உயிர்த்தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். அவர்களுடைய மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட, விடுதலைப் போராட்டத்தில் உயிர்த்துறந்த முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகம். அந்த அளவுக்குத் தியாகம் செய்த இஸ்லாமியர் அத்தனை பேருடைய வரலாறுகளையும் தொகுத்து எழுத ஆசிரியர் மேற்கொண்ட முயற்சிகள் இந்தப் பிரம்மாண்டமான புத்தகம். இந்தியாவில் நுழைய முதன் முதலில் முயன்றவர்கள் போர்த்துகீசியர்கள் தான். (16ம் நூற்றாண்டு) அப்போதே அவர்களை எதிர்த்துப் போரிட்டவர் குஞ்சலி மரைக்காயர் என்ற இஸ்லாமிய விடுதலை வீரர். அதிலிருந்து தொடங்கி ஏராளமான பேர், ஹைதர் அலி, திப்பு சுல்தான், கரன் சாஹிப், பகதூர் ஷா போன்ற மன்னர்கள் முதல் கான் அப்துல் கபர்கான், சகோதரர்கள், அபுல் கலாம் ஆசாத், கவிஞர் இக்பால், காயிதே மில்லத் போன்ற சமுதாயத் தலைவர்கள் மற்றும் சாதாரண பொதுஜன முஸ்லிம்கள் வரை, அவர்களின் தியாகத்தையும், முயற்சியையும் சிறப்பாக விவரித்திருக்கிறார் ஆசிரியர். இவை தவிர சிப்பாய்ப் புரட்சி, கிளர்ச்சி, கான்பூர் சதி வழக்கு என்று எண்ணற்ற தகவல்களையும் தந்திருக்கிறார். ஒவ்வொரு நூலகத்திலும் அவசியம் இருக்க வேண்டிய நூல் இது.