புத்தகங்கள்
Rating
மதுரை கம்பன் கழகத்தில் ஒவ்வொரு திங்களின் மூன்றாவது செவ்வாய்க் கிழமைகளில் தொடர்ந்து தொய்வில்லாது கம்பனில் ஆழங்கால் புலமை பெற்ற தமிழ்ப் பேரறிஞர்கள் தமிழ்ப்பொழிவு நிகழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் 2009ம் ஆண்டு ஜூன் துவங்கி டிசம்பர் வரை தமிழறிஞர்களால் நிகழ்த்திய கம்பன் கழகத்தின் மூல நாயகர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் பதிப்பித்து நூலாக தந்துள்ளார்.கம்பராமாயணத்தில் சமூக அமைப்பு, கம்பராமாயணத்தில் உரையாடல்கள், கம்பராமாயணத்தில் ஆறுகள், கம்பனில் அறிவியல் சிந்தனைகள், கம்பராமாயணத்தில் விதிக்கொள்கை, கம்பராமாயணத்தில் உவமைகளும், கற்பனைகளும், கம்பனில் துதிப்பாடல்கள் என ஏழு செந்தமிழ்ப் பொழிவுகளை உள்ளடக்கிய அரிய நூல். குறிப்பாக உரையாடல்கள், விதிக்கொள்கை என்ற தலைப்புகளில் உள்ள பொழிவின் செய்திகள், கம்பனின் காப்பியத்தில் அகழ்வாய்ந்து புதிய கோணத்தில் ஆய்வு செய்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. திருக்கோவில்களில் இறைவனுக்கு படைத்து அன்பர்களுக்கு பூஜையின் நிறைவில் பிரசாதம் வழங்கப்படுவது வழிபாட்டுத் தலங்களில் நிகழும் நிகழ்வு. ஆனால், புதுமையாக அனைவரும் கம்பனை கற்று பயனடைய வேண்டும், கம்பனின் மானுடத்தை நேசித்து, கம்பனில் அமைந்துள்ள விழுமியங்கள் மனித மனங்களைச் செம்மையுறச் செய்ய வேண்டுமென்ற விழைவோடு இந்நூலை பிரசாதமாக பெற்று பயன் பெறுக என வேண்டுகிறார் மதுரை விஸ்வாஸ் கலை பண்பாட்டு அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் சங்கர சீதாராமன்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!