கடந்த 1958ல் முதற்பதிப்பாக வெளிவந்த இந்நூல், தொல்காப்பியம், நன்னூல் என்னும் இரண்டு இலக்கண நூல்களையும் இணைத்தும், ஒப்பீடு செய்தும் எழுதப்பட்ட முதல் நூல். தொல்காப்பியம் முழுமைக்குமான முதல் அச்சு நூலாகவும் இதை கொள்ளலாம் என, முன்னுரையில் குறிக்கப்பட்டுள்ளது.
தமிழின் மிகச் சிறந்த இலக்கண நூல்கள் இரண்டும், அவற்றின் தன்மை கெடாமல், யாவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், இந்நூல் எழுதப்பட்டிருப்பது சிறப்பு. ஆங்காங்கு ஆங்கில விளக்கங்கள் இடம் பெற்று நூல் மேலும் சிறப்படைகிறது.
நன்னூல் பிற்காலத்தது, தொல்காப்பியம் பழங்காலத்தது. இவற்றின் கால வேறுபாடால் இலக்கண செய்திகள் வேறுபட்டுள்ளன. இரண்டு நூல்களும் செய்திகளால் ஒன்றுபடும் இடங்களும், வேறுபடும் இடங்களும் சிறந்த முறையில் நூலில் இடம் பெற்றுள்ளன.
நூற்பாக்கள் சந்தி பிரித்தும், செய்யுள் முதற்குறிப்பு அகராதி அமைத்தும் இப்பதிப்பு செய்யப்பட்டுள்ளது. 150 ஆண்டுகளுக்கு முற்பட்ட நூலின் முந்தைய வடிவமைப்பு கெடாமலும், புதிய மாற்றங்களோடும் இப்போது வெளியிடப்பட்டிருந்தது பாராட்டுக்குரியது.
பதிப்பாசிரியர்கள் வெங்கடேசன், பிரகாஷ் இருவரது பணியும் மிகவும் கடினமானது. அதை எளிதாக செய்து அழகாக செய்திருக்கின்றனர். வெளியிட்ட நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தாரின் உழைப்பும் போற்றத்தக்கது. தமிழறிஞர்களுக்கும், மொழியியல் ஆய்வாளர்களுக்கும் மிகவும் பயன்தரக்கூடிய நூல்.
தொன்னூற்கு அஞ்சி தடுமாறும் உளமின்றி கருத்தை செலுத்தி கற்பதனால் பெரும் பயன் விளையும். செவ்வியல் தமிழ்நூல் வரிசையில் வெளிவந்துள்ள நூலை தமிழுலகம் வரவேற்க கடமைப்பட்டுள்ளது. - கவிக்கோ ஞானச்செல்வன்