"அமுதசுரபி மாத இதழ் தனது 64வது தீபாவளி மலரைத் தமிழ் கூறும் நல்லுலகுக்கு வழங்கி வாசகர்களுக்கு இலக்கிய இனிப்புக் கச்சேரி நடத்தியிருக்கிறது. திருப்பூர் கிருஷ்ணனின் ஆசிரியர் பொறுப்பில் எழுத்துக்கும், எழுத்தாளர்களுக்கும் பெருமை சேர்க்கும் நோக்கம் ஒன்றையே பிரதானமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த மலரில் எழுதும் வாய்ப்பு பெற்றோர் பாக்யசாலிகள் என்றால், வாசிக்க இருக்கும் வாசகர்களோ மகா பாக்யசாலிகள் என்றே சொல்ல வேண்டும்.
வள்ளலார் பற்றி அருட்செல்வர் மகாலிங்கம், வேலூர் பொற்கோவில் பற்றி நாகா கண்ணன், கம்ப ராமாயணத்திலிருந்து இலங்கை ஜெயராஜ், சமஸ்கிருத மகாகவி காளிதாசர் பற்றி குச்சனூர் கோவிந்தராஜன் என சிலபடைப்புகள் பற்றிக் குறிப்பிடும்போது, பிறபடைப்பாளிகளின் பங்களிப்பும் எந்த அளவு மலரை மெருகேற்றப் பயன்பட்டிருக்கும் என்பதை அன்பர்கள் புரிந்து கொள்ளலாம். அமரர் லா.ச.ரா.,வின் ஜனனி என்ற சிறுகதைத் தொகுப்பு பற்றி கலைமாமணி விக்ரமன் எழுத்து ஒரு ஆத்மார்த்தமான படைப்பு. பிரபல மொழி பெயர்ப்பு கவிஞர் ஏ.கே.ராமானுஜனை வாசகர்களுக்குச் சுவைபட அறிமுகம் செய்திருக்கிறார்,
சா.கந்தசாமி எட்டு சிறுகதைகள், ஏராளமான கவிதைகள் வண்ணப் படங்கள் வெளிச்சத்துக்கு வந்த ஓவியங்கள் என்ற தலைப்பில் பிரபல எழுத்தாளர் அமரர் ஆர்.சூடாமணியின் வண்ணச் சித்திரங்கள். (இதுவே இந்த ஆண்டு தீபாவளி மலரின் ஹைலைட்). வாசகர்களை மனம் மகிழ வைக்கும் மலர், இந்த ஆண்டு தீபாவளி மலர்.