புத்தகங்கள்
திருவாசகம் - சில சிந்தனைகள் (முதல் பாகம்)
ஆசிரியர் : அ.ச.ஞானசம்பந்தன்
வெளியீடு: கவிதா பப்ளிகேஷன்
பகுதி: ஆன்மிகம்
Rating
8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை-17.
உலக மக்கள் அனைவராலும், ஏற்று போற்றப்பட்ட நூல் திருவாசகம். ஜி.யு.போப் போன்ற மாற்று மதத்தினரையும் மனமார போற்றச் செய்து, ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்ய வைத்தது திருவாசகம். திருவாசகத்திற்கு உருகாதவர் வேறு எந்த வாசகத்திற்கு உருகப் போகின்றனர்?
பெருமை பெற்ற இந்த நூலுக்கு அருமைத் தமிழ் அறிஞர் அ.ச.ஞானசம்பந்தன் வழங்கிய விரிவான சிந்தனை உரை இருபெரும், "அமுதப்பேழை நூல்களாய் வெளிவந்துள்ளன. நூல்களின் அச்சமைப்பும், கட்டமைப்பும் தனி சிறப்புடன் திகழ்கின்றன.வாழ்வை கணித ஆசிரியராய் கற்பித்தலில் தொடங்கிய அ.ச.ஞா., கற்பனை
உலகில் சிறகடிக்கும், ஆன்மிக தமிழ் நூல்களை அறிவியல் சிந்தனையில், ஆழ்ந்த உலகம் தழுவிய தத்துவ அறிவோடு ஒப்பிட்டு எழுதியும், பேசியும் தனி முத்திரை பதித்தவர். தனது, 60 ஆண்டு ஆன்மிக அனுபவத்தின் பிழிவாக உரை எழுதியுள்ளார்.தற்போது வழக்கில் உள்ள பல வரலாறுகளை, தக்க ஆதாரங்களுடன் அ.ச.ஞா., மறுக்கிறார். கி.பி., 1000ல் ராசராசசோழன் காலத்தில் திருமுறைகள் கண்டுபிடித்து பிறகு பாட வைக்கப்பட்டது என்பது தவறான செய்தி. பல்லவர் காலத்தில், 300 ஆண்டுகளுக்கு முன்பே தேவாரம் ஆலயங்களில் பாடப்பட்டதாக லால்குடி கல்வெட்டு கூறுகிறது.
மூவர் தேவாரத்திலிருந்து, திருவாசகம் முற்றிலும் மாறுபட்டுள்ளது. பக்தி, இறைமை தேவாரத்தில் உள்ளது. அறிவு, உணர்வு, காதல் திருவாசகத்தில் உள்ளது. காதலில், பக்தியில் ஈருடல் ஓர் உயிராகி, "நான் என்பது மறைந்து விடுகிறது.வள்ளலார், சிவப்பிரகாசர் போன்றோர் திருவாசக அனுபவத்தை பாடியுள்ளார்.
எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த மாணிக்கவாசகர், இது, "இறைச்சிப் பொருள் உரை என்ற பாடலுக்கு விளக்கமாக மனதில் தோன்றும் தொடர்புடைய எண்ணங்களை எழுதியுள்ளார். இது தொல்காப்பியர் கூறியுள்ள தனி வழியாகும்.சொல் வடிவாய் உமாதேவியும், அதில் ஒலி வடிவாய் சிவனும் உள்ளார். அடங்கு ஆற்றில் சிவம், இயங்கு ஆற்றில் சக்தி ஆவர்.
இந்த 20ம் நூற்றாண்டு மட்டுமல்ல, 1,000 ஆண்டுகள் கழித்து விஞ்ஞானப் புதுமைகளிலேயே மனித வாழ்க்கை வாழ்விற்கு, வழிகாட்டும் கலங்கரை விளக்கமாய் திகழும் (பக் 9) என்ற அ.ச.ஞா., கருத்து, கல்வெட்டாய் மனதில் நிலைக்கிறது.அணு, அண்டம் போன்ற ஆன்மிக சொற்களில் உள்ள அறிவியல் உண்மைகள், அதி அற்புதமாக விளக்கப்பட்டுள்ளன.அச்சோப் பதிகம் உட்பட 51 தலைப்புகளின் விளக்கமும், ஒப்புமை சிந்தனைகளும், பக்தியின் உச்சநிலை உணர்வை படிப்பவருக்கும் ஏற்படுத்துகின்றன.
மாணிக்கவாசகர் வரலாற்றையும், 1200 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த தமிழக வரலாற்றையும், பாடல் விளக்கமாக பின்னுரையில் அ.ச.ஞா., எழுதி, இப்பெரு நூல்கள் இரண்டினையும் கி.பி., 300ல் திருவாலங்காடுதான் இருந்தது. பிறகு, கி.பி., 500ல் தான் சிதம்பரம் தோன்றிற்று என்பது போன்ற அதிரடி உண்மைகளை கூறும், அ.ச.ஞா.,வின் புதிய சிந்தனைகள் பூத்த திருவாசக சோலை படித்து பாதுகாக்க வேண்டும் இந்நூலை.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!