கவனத்தை ஈர்க்கும் தலைப்புடைய இந்நூல், கல்வி, ஆசிரியர், சமூகம் என, பல தங்களின் கலைக் களஞ்சியம் போல் அமைந்துள்ளது. இந்தியக் குழந்தைகளுக்கான கல்வி உளவியல், கற்றல் கோட்பாடுகளை நாம் தேடித் காண வேண்டாமா? மனிதர்களை உருவாக்கும் வகுப்பறைகளை நோக்கி, நம் கவனம் மெல்லத் திரும்ப வேண்டாமா?‘எப்படியாவது, வெற்றி என்ற இலக்கை நோக்கி, பிள்ளைகளை மந்தைகளாய் துரத்தும், பண்பாட்டுச் சிதைவைத் தடுத்து நிறுத்த வேண்டாமா?
இத்தகைய வினாக்களுக்கு, விடை தேடும் முயற்சியில் ஈடுபட இந்நூல் பெரிதும் உதவும். பல கல்வியாளர்கள், நம் நாட்டிற்கென வகுத்த கல்வி முறை, எதுவும் பின்பற்றப்படாத அவல நிலை. மெக்காலே வகுத்த அடிமைக் கல்வி முறையே, இப்போதும் நீட்டிக்குறுக்கி அடித்து, திருத்த பயன்படுத்தப்படும் நிலையே நீடிக்கிறது.
இந்தியக் கல்விப் பாரம்பரியத்தின், நீண்ட வரலாறு நூலில் இழையோடியுள்ளது. உளவியல் கல்வியும், செய்முறைக் கல்வியும் வலியுறுத்தப்படுகின்றன. இது யாருடைய வகுப்பறை எனும் வினாவுள் எந்த ஆசிரியர்? என்ன பாடம் என்னும் வினாக்கள் அடங்கியிருப்பது மட்டுமின்றி, இந்த வகுப்பறை (கல்விமுறை) யார் வகுக்கத்தக்கது எனும், வினாப் பொருளும் அடங்கியுள்ளது. இறுதியாக சொன்ன பொருள், மிகுதியாக விவரிக்கப்பட்டுள்ளது. சமத்துவம், சமூக நீதி உள்ளிட்ட மதிப்பீடுகள், கல்வியின் ஒரு பகுதியாகவே, கல்வியின் உணர்வோடு கலக்க வேண்டும். எங்கு மாணவர்கள், ஆசிரியர்கள் பாதுகாப்பை உணர்கின்றனரோ, அங்கு நல்ல கல்வி அமையும். சிந்தனைகளை செயற்படுத்தும் நோக்கமுடையவர்கள் கல்வியாளர்கள், அரசியலார், ஆட்சி செய்வோர் அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது.
கவிக்கோ ஞானச்செல்வன்