‘‘ஊழிதோறும் புதிது புதிது தோன்றும் சீர்த்தியன்’’ என்று, கம்பர் அனுமனைப் போற்றுவார். அது உண்மை தான். பல யுகங்கள் கடந்து, இன்றும் அனுமன் புதிய புதிய உருவப் பொலிவுடன் தோன்றி அருளுகிறார். பக்தியும், தொண்டும் தவிர ஏதும் அறியாத அனுமனின் ஆளுமையும், அதை வரிகளில் படம் பிடித்து, படிப்பவர் மனதில் திரைப்படமாய் காட்டும் இந்திரா சவுந்திரராஜனின் எழுத்தின் திறமை சிறப்பானது. இடை இடையே ஓவியங்கள், எழுத்துக் காவியத்தை தூக்கி நிறுத்துகின்றன.
சீதையை கண்டு வந்த செய்தியை, அனுமன், ராமனிடம் கூறிய போது, நடக்கும் காட்சியை உன்னதமாக எழுத்தோவியமாகத் தீட்டியுள்ளார். ‘அனுமனைப் பற்றி அழைத்து, தன் மார்போடு அணைத்துக் கொண்டார். ஒருவருக்கு செய்யும் மிகப் பெரிய மரியாதையே, அவரை மார்போடு அணைத்து சரிநிகர் சமானமாகக் கருதி, தன்னையே அவர்களிடம் ஒப்படைப்பது தான். இந்தச் செயலை, ஆலிங்கனம் என்பார்கள். இங்கே, ராமாலிங்கனம் ஆன்மாவிற்கே சிலிர்ப்பு ஏற்படுத்தியது. (பக்.340)
வால்மீகியா? கம்பனா? துளசிதாசரா எந்த ராமாயணம் இங்கே பின்பற்றி எழுதப்பட்டுள்ளது என்ற வினாவுக்கு, விடை வாசகருக்காகவே ஒரு புனைக்கதை புதினம் போல் எழுதப்பட்டுள்ள இந்த நூல், வாசக ராமாயணம், அனுமன் கதை ஆகும். மாத இதழில் வந்தது போலவே தந்திராமல், தனித்தனி தலைப்புகளுடன் எழுதி இருக்கலாம். தலைகாட்டும் ஒரு சில எழுத்துப்பிழைகள் (சாம வேத தான தண்டம்) சாம பேத (பக்கம் 339), தவிர்க்கப்பட வேண்டும். அனுமனின் அருள் வாழ்வை, சுவைபட பக்தி ரசத்துடன் காட்டும் கதை நூல் இது.
முனைவர் மா.கி.ரமணன்