இந்தியா சுதந்திரம் பெற காந்திஜி அகிம்சை வழியில் போராடியபோது, அவர் முறைக்கு முற்றிலும் எதிரான வழியில் புரட்சியாளர்கள் பலரும் போராடினர். பகவத்சிங், சந்திரசேகர ஆசாத் போன்ற தீவிர புரட்சியாளர்கள் உறுப்பினராய் இருந்த அந்த அமைப்பு, ‘இந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிக் அசோசியேஷன்’ என்று, பிற்காலத்தில் பெயர் பெற்றது. ஆரம்ப காலத்திலிருந்தே காந்தியின் வழியில் நம்பிக்கை இழந்தவர் இந்நூலின் மூல ஆசிரியரான மன்மதநாத் குப்தா. அவரது, 13வது வயதிலேயே முதல் சிறை வாசம் (வேல்ஸ் இளவரசரின் இந்திய வருகையைப் புறக்கணிக்க வலியுறுத்தும் பிரசுரங்களை வாரணாசி நகரத் தெருக்களில் வினியோகம் செய்ததற்காக) அதன் பிறகு ஒரு புரட்சியாளராக அவர் மேற்கொண்ட பல நடவடிக்கைகளுக்காக, சிறை வாசம் செய்தார். தனது சிறைவாசத்தின் போது, பட்ட துன்பங்களையும், சக கைதிகளின் அனுபவங்களையும் உள்ளத்தை உருக்கும் வகையில், இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார்.
இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் புரட்சியாளர்களின் பங்களிப்பு மகத்தானது, இந்திய ஆட்சியைவிட்டு வெளியேற தருணம் வந்து விட்டது என்ற முடிவை, பிரிட்டிசார் எடுப்பதற்குத் துரிதப்படுத்தியது புரட்சியாளர்களின் உத்வேகம் தான் என்கிறார் நூலாசிரியர். இருட்டடிப்பு செய்யப்பட்ட பகுதியை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் நூலாசிரியர். தம் ஆழ்ந்த அனுபவங்களையும் மானசீகமாய் பெறுகிறார். அனைவரும் படிக்க வேண்டிய நூல்.
மயிலை சிவா