நூலாசிரியர், முனைவர் பட்டம் பெறுவதற்கு, பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்கு சமர்பித்து ஆய்வேடு, தற்போது நூலாக மலர்ந்துள்ளது. அரிது முயன்று நூற்றுக்கணக்கான நூல்களை ஆய்வு செய்து, இந்நூலைப் படைத்துள்ளார் நூலாசிரியர்.
இலக்கியமும், தொன்மும் (பக்.10), கலைத் தொன்மங்கள் (பக்.59), சமயத் தொன்மங்கள் (பக்.85) இயற்கைத் தொன்மங்கள் (பக்.171), சிறப்புத் தொன்மங்கள் (பக்.198) என, ஐம்பெருங் காப்பியங்களின் (கி.பி.2ம் நூற்றாண்டு முதல் 10ம் நூற்றாண்டு வரை) தலைப்பிட்டு, அற்புதமான ஆய்வு நூலைப் படைத்துள்ளார்.
ஆசிரியர் குறிப்பிடுவது போன்று, ‘50 ஆண்டுகள் அளவில், தமிழ் இலக்கிய உலகில் பேசப்பட்டு வருவதும், மேலை நாட்டின் உதவியால், தமிழில் வந்தேறிய தொன்மம் எவ்வாறு ஊடாடி உள்ளது என்பதை, மேற்கோள்களோடு விரித்துரைக்கும் செம்புலமை நம்மை வியக்க வைக்கிறது. பக்.228 முதல் பக்.432 வரை உள்ள நூலடைவும், தொன்மைப் பட்டியல் ஆசிரியரது உழைப்பையும், புலமையையும் வெளிக்காட்டுகிறது. ஆய்வு மாணவர்களுக்கு பெரிதும் பயன் தரவல்ல நூல்.
குமரய்யா