ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, சமூக அக்கறை கொண்ட பல தீர்ப்புகளை வழங்கியவர். டாக்டர் அம்பேத்கர் மாபெரும் சட்டநிபுணர் என்பதும், இந்திய சமூக வாழ்வில், தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒளி தர முயன்று, அம்முயற்சிகளில் வெற்றி பெற்றவர் என்பதும் வரலாறு. அவரது லட்சிய உலகம் தங்குதடைகளற்ற சுதந்திரமானது, அறிவொளி மிக்க இந்தியா உருவாக விரும்பி, அதற்கான சிந்தனை விதைகளை விதைத்தவர்.
அவர் கண்டபாதையில், சுதந்திரத்தை தனிமனிதரும் போராடிப் பெற வேண்டும் என்ற அடிப்படையில், நீதியரசர் தனது பதவிக்காலத்தில், அளித்த தீர்ப்புகள் நூலாக மலர்ந்திருக்கிறது. அம்பேத்கர் பார்வையில் வழங்கப்பட்ட இத்தீர்ப்புகள் சமூகநீதி காக்க, சமுதாயத்தை வளப்படுத்த உதவும் என்று, பதிப்பாசிரியர் ரவிக்குமார் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது பொருத்தமானது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதியாக பணியாற்றியபோது, அளித்த தீர்ப்புகளில் மாமேதை அம்பத்கர் கூறிய கருத்துகளையும் அப்படியே ஆங்கிலத்தில் தந்திருப்பது, இந்த நூலை படிக்கும் இளைஞர்களுக்கு நிச்சயம் நல்ல தெளிவைத் தரும். வரவேற்கத்தக்க நல்ல முயற்சி இது.
தவசி