யாருக்கு பிடிக்காது மழை? மழைக்கு பிடிக்காதவர்கள் யார்? காதல் மழை. காதல் கவிதைகள் படிப்பது சுவாரசியமானது. மாலை நேர மெல்லிய மழையில் நனைவதற்கு இணையானது. பழனிபாரதியின் இந்த கவிதை தொகுப்பும் அதுபோன்றதே. தொகுப்பு முழுக்க காதல் கவிதைகள் மட்டுமே இருந்தாலும், உள்ளங்கையில் பொத்தி வைத்திருந்த மின்மினிப்பூச்சி, நம்மை அறியாமல் விரல் இடுக்குகளில் இருந்து நழுவுவதைப் போல், படிப்பதற்கு சுவாரசியமாக இருக்கிறது.
குறிப்பாக, ‘அபூர்வா, உயிர்த்துளை, உன்னதம், உச்சிப்பூக்கள், இரவு, அதன் பிறகு, உன் நிலத்தை கடந்து போகிறேன், மலர்ச்சுழல்’ போன்ற கவிதைகள் வாசிக்கும்போதே, மனதில் காட்சிப் படிமங்களாக தங்கி விடுகின்றன. பல்லிடுக்கில் சிக்கிக் கொண்ட மாமிசத் துண்டு போல் தவித்துக் கிடக்கும் மனதை, ஒரு ஊமைச் சிறுமி, தன் முன்னிரவு கனவை விவரிப்பது போல் உள்ளது, பழனிபாரதியின் மொழிநடை. மனதில் உள்ள அரூப காட்சிகளை, கோடுகளில் கொண்டு வந்தது போல், ஏ.பி. ஸ்ரீதரனின் ஓவியங்கள் உள்ளன.
அ.ப.ராசா