பதினைந்து ஆண்டுகளுக்கு முன், (1999, டிச., 5ம் தேதி), தென்னாப்ரிக்க நகரான கேப்டவுனில் நிகழ்ந்த, மூன்றாவது சர்வமத மாநாட்டில், நெல்சன் மண்டேலாவுடன் கலந்து கொண்டு, சுவாமிஜி ஆற்றிய ஆங்கில உரையின் தமிழாக்கம் இது. பாரதம், ஆன்மிகம், பகவத்கீதை பற்றிய மேன்மையான செய்திகள் பல, இதன் கண் ஒளி வீசுகின்றன. ‘போரை உருவாக்குவதற்காக போதிக்கப்பட்டதல்ல பகவத்கீதை; நீங்கள், உங்கள் கடமைகளை எங்கு, எப்போது, எப்படி செய்ய வேண்டும் என, உங்களுக்கு தெரியப்படுத்துவதே கீதையின் நோக்கம்’ என்கிறார் சுவாமிஜி.
‘மதமாற்றம் என்பது மற்றவர்களின் ஆழமான நம்பிக்கையைப் புண்படுத்துவதாகும். மற்றவர்களை மதமாற்றத்தில் ஈடுபடுத்த எண்ணுவது என்பது, நம் எதிரில் இருப்பவன் வேறுவித எண்ணங்களோடு உள்ளான். அவனை நம்மால் அடக்க இயலாது என, எண்ணும் பயத்தின் வெளிப்பாடே’ என, உரத்த குரலில் அறிவிக்கிறார் சுவாமிஜி.
ரிச்சர்ட் போன்ற வெளிநாட்டாரும் பாராட்டும் சுவாமிஜியின் உரை படித்து இன்புறத்தக்கது. சிந்தனைக்கு இன்பம் பயக்கும் உரை.
கவுதம நீலாம்பரன்