சைவத் திருமுறைகளுள் பதினோராம் திருமுறையாக இடம்பெற்றுள்ள பட்டினத்தார் பாடல்களும், பட்டினத்தாரின் ஏனைய பாடல்களின் தொகுப்பில் உள்ள பாடல்களும், புதுக்கவிதை வடிவில் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. சித்தர்களுள் ஒருவராக போற்றப்பட்ட பட்டினத்தார், தம் பாடலுள் கூறும் அரிய சைவ சித்தாந்த கருத்துகளை, எளிய, இனிய கவிதை வடிவில் இந்நூல் தந்துள்ளது. சித்தர் என்போர் யாவர்; மூடநம்பிக்கைகளை வேரறுத்து, உருவ வழிபாட்டை எள்ளி நகையாடிய இவர்கள், பின் ஏன் பல தலங்களின் இறைவனை முன்நிறுத்தி பாடல் புனைந்துள்ளனர்; புராண நிகழ்வுகளையும், நாயன்மார் கதைகளையும் குறிப்பிட்டுள்ளனர் என்பதற்கு, இந்நூல் கூறும் விளக்கம், சிந்தனைக்கோர் விருந்து. மொத்தத்தில், இரும்பாக இருந்த சித்தாந்தத்தை கரும்பாக்கி தந்தவர் பட்டினத்தார். அதைச் சாறு பிழிந்து, கவிரசமாக தந்துள்ளது இந்நூல்.
புலவர் சு.மதியழகன்