தமிழ் எழுத்துலகில், இடதுசாரி இலக்கிய கருத்தியல், பரவலான போது, அறியப்பட்டவர், கவிஞர் மு.முருகேஷ். கடந்த, 1990களுக்குப் பின், ‘ஹைக்கூ’ கவிதைகள், தமிழில் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதிலும் தனித்து அடையாளம் காணப்பட்டார்.
இவரின், பத்தாவது கவிதை தொகுதி, ‘கழிப்பறைக்கு சென்றிருக்கிறார் கடவுள்’. கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே என்ற இடதுசாரி கருத்தியலை, கவிஞர் உள்வாங்கி இருப்பதால், வாசகனை மிரட்டாத வகையில், அவரது கவிதைகள், நம் தோள் மேல் கைபோடும் நண்பனைப் போல பேசுகின்றன. இதில் விவரிக்கும் அனுபவங்களும், எளிய மனிதர்களின் வாழ்வையே படம் பிடித்துக் காட்டுகின்றன.
அதனால், தேனீரை பருகிக் கொண்டே இலக்கியம் பேசும் தோழியைப் போல், எந்த உறுத்தலுமின்றி இவருடைய கவிதைகளை வாசிக்கலாம். இதில், போதையும் இல்லை; போதனைகளும் இல்லை. வாக்குறுதிகளும் இல்லை; விசாரணையும் இல்லை. ஓடும் நதியில், ஒரு கூடைப் பூவை, ஒரே நேரத்தில் கொட்டியதைப் போல், அழகாக நகர்கிறது. எளிமையான, அதே நேரத்தில் தேர்ந்த மொழிநடை. பல இடங்களில் வார்த்தைகளை பிரயோகிக்கும் முறை, இவருக்கு லகுவாக கைகூடியுள்ளது. காட்சிகளை விவரிக்கும் விதமும் அப்படியே அமைந்துள்ளது. சட்டென விழும் திடீர் மழையை போல், எதிர்பாராத இடங்களில் எல்லாம் திகைப்பூட்டுகிறார்.
அ.ப.இராசா