தீரன் சின்னமலைக்கு, 250 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை எடுத்துக் கொண்டு இந்தச் சரித்திர கதையை படைத்திருக்கிறார் குமாரகேசன். கதையின் களமாக வருவது ஒரு மலையடிவார பூமி. கொங்கு சீமையின் தென் கிழக்குப் பகுதியில் இருக்கும் இந்த மண்ணிற்கு வலிமையும், வன்மமும், வலியும் அதிகம்.
பாண்டிய நாட்டின் வடக்குப்புற எல்லையை ஒட்டி அமைந்திருக்கும் கருமலையும் – தொடர்ச்சி ரங்க மலையும் கூட கதையில் வருகின்றன. கொங்குப் பகுதி மக்களின் கிராம வாழ்வை, நுணுக்கமாகத் தன் கதைகளில் சித்தரித்த குமாரகேசன், எழுத்துக்களம் இலக்கிய விருது – நொய்யல் இலக்கிய விருது, பாரதி இலக்கியப் பேரவை விருதுகள் பெற்றவர்.
வீரன் வெள்ளியங்கிரி, பொம்மி நாயக்கர், அவரின் சேவல் கட்டு சாகசம், மலையன் பொந்தப்பன், செக்கு நல்லான், மாயப்பாண்டி போன்ற பாத்திரங்கள் ரத்தமும், சதையுமாக நம் முன் உலா வருகின்றனர்.
ஊர்க் கட்டுப்பாடும், சமூகக் கட்டுப்பாடும், பலரை வாழவும் வைத்திருக்கிறது; சிலரை வதைக்கவும் செய்திருக்கிறது. கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கும்போது, இயந்திர கதியில் வாழ்ந்து கொண்டிருப்பது புரியும் என்று நிறுவுகிறார் குமாரகேசன். வட்டார வழக்கிலேயே கதை சொல்லப்படுவது ஒரு வசீகரம். அவசியம் படிக்க வேண்டிய நாவல்.
எஸ்.குரு