இறைவனையே இசைய வைத்த பாடகர்களின் வாழ்வில் நிகழ்ந்த திருப்பங்களையும், அந்த திருப்பங்களை, அதீத பக்தி எனும் விருப்பத்தால், அவர்கள் கடந்து போன அனுபவங்களையும்
விவரிக்கிறது, இந்த நூல்.
கி.பி. 6ம் நூற்றாண்டில், காலடியில் வாழ்ந்த, ஆதிசங்கரரின் வாழ்க்கையோடு துவங்கி, கி.பி.,18 நூற்றாண்டில், நெல்லையில் வாழ்ந்த, ஆவுடையக்காவின் வாழ்க்கையோடு முடிகிறது.
சைவ, வைஷ்ணவ ரத்தினங்கள் என்ற பகுதியில், நாயன்மார்கள், ஆழ்வார்கள் தொடர்பான இசை செய்திகள் கொடுக்கப்பட்டுள்ளன.
மொத்தம், 4.75 லட்சம் கிருதிகளை இயற்றியவர் புரந்தர தாசர்; ஸ்வர ஜதிகளின் அமைப்பாளராக இருந்தவர் சியாமா சாஸ்திரி; மேற்கத்திய வயலினை, கர்நாடக சங்கீதத்தில் புகுத்தியவர் முத்துஸ்வாமி தீட்சிதர்; தினமும் 1.20 லட்சம் ராமநாமங்கள் ஜெபித்தவர், சரபோஜி மன்னரையே உதாசீனப்படுத்தியவர் தியாகராஜ சுவாமிகள், 12 ஆண்டுகள், கோல்கொண்டா சிறையில் வாடியவர் பத்ராசல ராமதாசர், அலமேலு மங்கையிடம் உணவருந்தியவர் அன்னமாச்சார்யா, வஞ்சப் புகழ்ச்சியால் இறைவனை அணுகியவர் மாரிமுத்தாப் பிள்ளை... என, சங்கீத ரத்தினங்களின் இசைக் குறிப்புகளோடு சேர்த்து, வாழ்க்கை குறிப்புகளை படிக்கும் போது, நிறைவு ஏற்படுகிறது.
‘உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பாலயம்’, என, யோகவழி சொன்ன திருமூலர் துவங்கி, ‘தாயோடு அறுசுவை போம்... பொன் தாலியோடு எவையும் போம்’ என, உலகின் நிலையாமை சொல்லும் அவ்வையாரின் பாடல் திறத்தை பாராட்டி, வாழ்வின் சூழலியல் பாடல்களை, யோக ரத்தினங்கள் பகுதியில் குறிப்பிட்டது,
மிக முக்கியமானது.
பாடல்களை பற்றியது மட்டுமல்ல, பாடகர்களை பற்றியதும் தான், இந்த நூல்.
– நடுவூர் சிவா