இசை மேதைகள் என்னும் தலைப்பில் அமைந்துள்ள இந்த நூல், தமிழகத்தின் தலைசிறந்த கர்நாடக சங்கீத கலைஞர்களைப் பற்றிய அபூர்வக் களஞ்சியமாகத் திகழ்கிறது. கி.பி.,19ம் மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த, இசை கலைஞர்கள் சிலரது வாழ்க்கைக் குறிப்புகள்
இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ளன.
நூலாசிரியர், தா.சங்கரன், வீணை தனம்மாளின் பேரன். ஒரு சிறந்த இசை பாரம்பரியத்திலிருந்து வந்துள்ள ஆசிரியர், கர்நாடக சங்கீதத்தில் சிறந்து விளங்கிய கலைஞர்கள் சிலரின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்துள்ளது, பொருத்தமானதே. டைகர் வரதாச்சாரியார், இலுப்பூர் பஞ்சாபகேச பிள்ளை, எஸ்.ஜி.கிட்டப்பா, தவில் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, கொன்னக்கோல் பக்கிரியா பிள்ளை, புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை, திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, வீணை தனம்மாள், பெங்களூர் நாகரத்தினம்மாள், மலைக்கோட்டை கோவிந்தசாமி பிள்ளை போன்ற, 17 தலைசிறந்த கலைஞர்களின் வாழ்க்கை குறிப்பு, அவர்களது இசையின் மேன்மை பற்றிய செய்திகள், எளிய நடையில் விரிவாகவும் சுவாரசியமாகவும் விளக்கப்பட்டுள்ளன.
வெறும் பெயர் அளவில் மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் இக்கால இசை சமூகத்தினர்க்கும் இசை பயிலும் மாணவர்களுக்கும், இசை ஆர்வலர்களுக்கும் இந்த நூல் மிகவும் பயன் உள்ளதாக அமையும்.
– சுபஸ்ரீ ஹரி