முகப்பு » பெண்கள் » மகடூஉ முன்னிலை பெண்

மகடூஉ முன்னிலை பெண் புலவர் களஞ்சியம்

விலைரூ.300

ஆசிரியர் : டாக்டர். தாயம்மாள் அறவாணன்

வெளியீடு: தமிழ்க் கோட்டம்

பகுதி: பெண்கள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
சங்ககாலத்தில், கற்றவராகவும், கவிஞராகவும், காதல் சமத்துவம் உடையவராகவும் பெண்கள் இருந்தனர் என்பதை, பல அகச்சான்றுகளோடு நிறுவுகிறார், நூலாசிரியர் தாயம்மாள் அறவாணன். சங்ககால மகளிர், அனைத்து நிலையிலும் முன்னிலைப்படுத்தப்பட்டனர் என்பதற்கு, நூலின் தலைப்பே, கட்டியம் கூறுகிறது.
பிற்காலத்து பெண்டிர் கல்வி கற்பது மறுக்கப்பட்ட சூழலில், சங்ககாலப் பெண்டிர், ஒரு தடையும் இல்லாமல், ஆணுக்கு நிகராக கற்றிருந்தனர். பொருளாதார ஏற்ற தாழ்வின்றி, எளிய பெண்டிரான வெண்ணிக்குயத்தியும், அரச மகளிரான ஆதிமந்தி, பாரிமகளிர், பெருங்கோப்பெண்டு போன்றோரும் புலவர்களாய் இருந்தனர்.
ஆண்பாற் புலவருக்கு நிகராக, பெண்பாற் புலவராகிய முடத்தாமக் கண்ணியார், 248 அடிகளையுடைய பொருநறாற்றுப் படையை இயற்றியுள்ளார். இலக்கியங்களேயன்றி, இலக்கண நூல்களையும் இயற்றும் ஆற்றல் பெற்றிருந்தனர் என்பதற்கு, ‘காக்கைப் பாடினியம்’ எனும் இலக்கண நூலே உரைகல்.
‘எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்’ என்று, உரிமையோடு துணைவரை தேர்ந்தெடுக்கும் காதல் மணமும், சோழ இளவரசி ஆதிமந்தியார், சேர இளவரசனாகிய ஆட்டனத்தியை காதலித்து மணந்த கலப்பு மணமும், அக்காலச் சமுதாயத்தால் மறுக்காமல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
உடன்போக்கு உரிமை, காதலை முன்மொழியும் உரிமை ஆகியவற்றால், பெண்டிர் தமக்குரிய தகைமையை இழக்காதிருந்தனர். பெண்களும், இசையறிவுடன் திகழ்ந்தனர் என்பதற்கு, ‘பாழனி’ எனும் சொல்லும், ‘பல்லியம்’ எனும் இசைக் கருவியின் பெயர் தாங்கிய, ‘நெடும்பல்லியத்தை’ எனும் பெண்பாற் புலவரின் பெயரும் சான்று பகர்கிறது. மனைவியை முன்னிறுத்தி கணவரை, ‘ஆன்றோள் கணவ’ தாயை முன்னிறுத்தி, ‘தேவி ஈன்ற மகன்’ எனும் சொற்றொடர்களும், அரண்மனைப் பேரவையில் அரசனும், அரசியும் ஒருசேர அமர்ந்திருக்கும் வழக்கமும், பெண்களுக்கு வழங்கப்பட்ட தகைமையையும், தலைமையையும் எடுத்துக் காட்டுகிறது.
போர்களால் பெண்டிர் பாதிக்கப்படக்கூடாது எனும் போர் அறம், ‘பூட்கை மறம்’ என, போற்றப்பட்டாலும், சங்ககாலப் பெண்டிர் வீரம் குன்றாதவர்களாக விளங்கினர் என்பதற்கு, பொன்முடியார், அவ்வையார் போன்றோரின் புறப்பாடல்களே சான்று.
சங்ககாலத்தைத் தொடர்ந்து, கணவனால் வணங்கும் பேறு பெற்ற காரைக்கால் அம்மையாரின் வரலாற்றையும், காதலைப் பெண்களும் வெளிப்படுத்தலாம் என, ‘பாவை’ இலக்கியங்களுக்குப் பாடடு அமைத்த ஆண்டாள் வரலாற்றையும் அழகுற சொல்லப்பட்டுள்ளதோடு, அவர்தம் படைப்புகளும் இந்நூலுள் இடம்பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
மறுமணம் பற்றி கூறப்படாத சங்ககாலத்தில், கைம்பெண் நோன்பின் கடுமையைவிட, கணவனுடன் தீப்பாய்ந்து மாய்த்துக் கொள்ளுதலே மேலானது என்ற நிலை இருந்துள்ளது. சங்ககால பெண்பாற் புலவர்கள் பற்றிய எண்ணிலடங்கா செய்திகளைக் கூறும் இந்நூல்,
பெண்ணியம் பேசுகின்றவர்களுக்கு கொழுத்தத்தீனியாக அமைவதோடு, பெண்மையை போற்றும் பெட்டகமாக திகழ்கிறது.
சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us