கடந்த, 1,500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வடமொழி மகாகவி காளிதாசரின், ‘சாகுந்தலம்’ காவியத்தை, 100 ஆண்டுகளுக்கு முன் அழகு தமிழில், மறைமலையடிகள் அதே பெயரில் செய்யுளாக ஆக்கினார். அந்த நூல், தற்போது மறுபதிப்பு கண்டுள்ளது. தனித்தமிழ் இயக்கத்தை துவக்கிய மறைமலையடிகளின் தூய தமிழ் நடையை அறிய, இந்த நூலைப் படித்து மகிழலாம். தமிழனின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை பார்ப்பது போல், படிப்பவரை சிலிர்க்க வைக்கும் இவரது செந்தமிழ் நடை. நாடகத் தமிழ் பற்றிய விரிவான ஆய்வு, முன்னே தரப்பட்டுள்ளது. ‘நாடகத்துறையில் ஒப்பாரும் மிக்காரும் இன்றித் திகழ்பவர் ஆங்கிலத்திற் சேக்குவீயரும், அருந்தமிழில் இளங்கோவடிகளும், வடமொழியில் காளிதாசருமே ஆவர்’ (பக்.49) என்கிறார், மறைமலையடிகள்.
மேலான பேரழகி மேனகைக்கும், தவமுனிவர் விசுவாமித்திரருக்கும் தோன்றிய மகள் சகுந்தலையை, மறைமலையடிகள் வர்ணிப்பதில், தமிழும் நடனம் ஆடுகிறது. ‘அல்லிக் கொடியிற் கவின் கெழுமிய அல்லி மலரல்லாற் பிறிதொன்று உளதாமோ! நீலமும் பசுமையுஞ் சாலக் கலந்த கோலக் கலாவ மயிலுக்கு ஆலந்தோகை அழகிய மயிலல்லது ஏலப்பிறப்பதினி வேறுண்டோ?’ (பக்.54) நாடகம் பற்றிய முழு ஆய்வு, கதை மாந்தர் இயல்புகள், கதை நிகழும் இடமும், காலமும், காளிதாசர் காலமும் வரலாறும், காளிதாசரின் புலமை நயங்கள், அவர் காலத்து மக்களின் வாழ்வியல் நிலைகள் என்று, பல்வேறு தலைப்புகளின் ஆய்வுகள், அடிகளாரின் நுண்மாண் நுழைபுலத்திற்கு சான்றுகள்.
போஜராஜன் கதை பொய்க்கதை என்று தள்ளிவிட்டு, காளிதாசன் வரலாற்றை ஆராய்கிறார் அடிகளார். மாக்ஸ்முல்லர், கி.பி., நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் காளிதாசர் வாழ்ந்தவர் என்கிறார். அடிகளார், ‘காளிதாசரும் மாணிக்கவாசகரும், விநாயகக் கடவுள் வழிபாடு உண்டாவதற்கு முன், முறையே ஐந்தாம் நூற்றாண்டின் முற்பாதியிலும், 3ம் நூற்றாண்டின் பிற்பாதியிலும் இருந்துள்ளனர்’ (பக். 139) என்கிறார்.
தமிழகத்தில் சமஸ்கிருதத்தை வெறுத்து, தமிழில் அதைச் சிறிதும் கலக்காது பேசியும், எழுதியும், தனித்தமிழ் இயக்கம் நடத்தியும் வந்தவர் மறைமலையடிகள். ஆனால், அவர் சமஸ்கிருத மொழி பயின்று, அதில் முக்கிய காவியமான, ‘சாகுந்தலத்தை’ பலமுறை படித்து, மனம் கரைத்து தன் புலமையால், அதைத் தமிழிலே மொழியாக்கம் செய்து தந்துள்ளார். ‘சகுந்தலாவண்யம்’ என்ற சமஸ்கிருத சொல்லின் நயத்தைப் போற்றியுள்ளார். சமஸ்கிருத மொழியை வெறுத்தவர், சாகுந்தல காப்பியத்தை தமிழில் மொழிபெயர்த்து, அதன் மூலமாக, மூலநூலுக்குப் பெருமை சேர்த்து விட்டார்.
– மா.கி.ரமணன்