தமிழகம் மட்டுமின்றி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தவர் எம்.ஜி.ஆர்., அந்த மூன்றெழுத்துக்காக, தமிழகத்தில் உயிரை விட்டவர்கள் எத்தனையோ பேர். எம்.ஜி.ஆரைப் பற்றி எத்தனையோ நூல்கள் வந்து விட்டன. அவரே எழுதிய, ‘நான் ஏன் பிறந்தேன்’ நூல் கூட தற்போது மறுபதிப்பாகி வெளிவந்துள்ளது.
ஆனால், மற்ற நூல்களுக்கும், இந்த நூலுக்கும், மிகப் பெரிய வித்தியாசங்கள் உள்ளன. மற்ற நூல்கள் எம்.ஜி.ஆர்., வாழ்வின் வெற்றி பக்கத்தை மட்டுமே சொல்லி உள்ளன. ஆனால், இந்த நூல், அவரது மறுபக்கத்தை யும் சுட்டிக் காட்டி உள்ளது. அவரது பலவீனங்களையும், சறுக்கல்களையும், அரசு நிர்வாகத்தில் அவர் எதிர்கொண்ட சவால்களையும் தெள்ளத் தெளிவாக காண்பித்துள்ளது.
உதாரணத்திற்கு நூலில் இருந்து...
* தன்னை வைத்து ஒரு படத்தில் நன்றாக சம்பாதிப்போரை, மீண்டும் தன்னோடு கூட்டுசேர வைத்து, அவர்களை நஷ்ட படுகுழியில் தள்ளுவது தான் எம்.ஜி.ஆர்., ஸ்டைலா?
* எம்.ஜி.ஆர்., வெற்றியின் எவரெஸ்டை தொட, தடையாக இருந்த ஒரே தஞ்சாவூர் நந்தி, சிவாஜி கணேசன். அதை தகர்த்து துாளாக்க, தேவரையே, கள பலியாக்க வேண்டும். சிவாஜியின் கைகளைக் கொண்டே, அவர் கண்களை குத்தும் விளையாட்டில் எம்.ஜி.ஆர்., எப்போதும் சமத்தர். (பக்.112)
* எம்.ஜி.ஆரிடம் அனைவரும் பயந்து, பவ்யம் காட்டும் போது, ‘என்ன மிஸ்டர் ராமசந்திரன்’ என்று, கம்பீரமாக கேட்பவர் சந்திரபாபு. அவரை, 48 மணி நேரத்தில், திவாலாக்கியது எம்.ஜி.ஆரின் சாமர்த்தியமா, சாகசமா, பச்சை துரோகமா? (பக்.138)
* எப்படியெல்லாம் ஒரு படத்தை தாமதப்படுத்தலாம் என்பதற்கு, தனி அகராதி எம்.ஜி.ஆர்., (பக்.149)
* நிஜத்தில் எம்.ஜி.ஆருக்கு, மக்கள் செல்வாக்கு கூடிய அளவுக்கு, நாட்டு நடப்புகள் தெரியாது. அவர் நடிப்பதில் காட்டிய ஆர்வத்தில் சரிபாதியை கூட, அரசியலில் செலுத்தியது கிடையாது. கருணாநிதி எதிர்ப்பு என்கிற கேடயம் அவரை பாதுகாத்தது. படிப்படியாகவே அவர் தன் ஆளுமைத் திறனை மெருகேற்றிக் கொண்டார். (பக். 330)
தி.மு.க.,விலிருந்து எம்.ஜி.ஆர்., பிரிந்தது, தனி பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்தது, விடுதலை புலிகள் அமைப்புக்கு ஆதரவளித்தது, உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டது, எம்.ஜி.ஆரின் இறுதிக்காலத்தில நிகழ்ந்த அரசியல் சதுரங்கங்கள் என, எந்த சமரசமும் இல்லாமல் நேர்மையாக, இந்த நூலை எழுதியுள்ளார் ஆசிரியர்.
– கலாதம்பி