அண்டரண்டப்பட்சி, முன்னொரு காலத்தில் வாழ்ந்த மூத்த பறவை. எட்டு யானைகளை அடக்கி, தூக்கி கொண்டு பறக்கக் கூடிய வலிமையும், சாமர்த்தியமும் மிக்கதாக, புராணங்களில் சித்திரிக்கப்பட்டுள்ளன. அது பற்றிய சித்திரம், ஆவுடையார் கோவிலில் உள்ளது.
அந்த பறவையின் குணத்திற்கு இணையாக, துவரி அம்மாள், சாமர்த்தியம் மிக்கவளாக விளங்கி, சவால்களை எதிர்கொண்டு எப்படி வெற்றி காண்கிறாள் என்பதே இந்த நாவல். அன்பு, பாசம், கடமை போன்ற உணர்வுகளால் துவரி அம்மாள் இயல்பான பெண்ணாகவே படைக்கப்பட்டிருந்த போதும், சாதாரணமான வாழ்வியல் சிக்கல்களையும், உணர்ச்சிகரமான செயல்களையும் சாமர்த்தியமாக முடிக்கத் தெரிந்தவளாக இருப்பதும், தனியொருத்தியாக நின்று, கொண்ட கடமையில் விலகாதவளாக படைக்கப் பெற்றிருப்பதும் நாவலின் தரத்தை மேம்படுத்துகின்றன. கதாபாத்திரங்கள் யாவும் உளவியல் அடிப்படையில் படைக்கப் பட்டிருப்பதோடு, அடுத்தது என்ன என்று அறிய தூண்டும் ஆர்வத்தையும், மெல்லிய இழையோடும் நகைச்சுவையுடனும் படைத்திருப்பது கூடுதல் சிறப்பு.
– சசி பிரபு