உண்மை, நேர்மை, இறை வழிபாடு, அன்பு, மானுட நேசம் இத்தகைய பண்புகளின் ஒட்டு மொத்தமான வழியே, காந்தியம் அல்லது அகிம்சை வழி. காந்தியம் என்பது காந்தி தான், கூறியதையும் செய்தவையும் மட்டும் சார்ந்தது அல்ல. காந்தியில் துவங்கி, கடந்த நூற்றாண்டுகளில், உலகமெங்கும் உருவான நவீன அரசியல், பொருளியல், சூழலியல் சிந்தனைகளையும் ஒருங்கிணைத்தே காந்திய சிந்தனையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை நூலின் பல அத்தியாயங்களில், தெளிவாக விளக்கி உள்ளார் நூலாசிரியர்.
அமெரிக்கரான ஹென்றி டேவிட் தோரா எழுதிய, ‘சட்ட மறுப்பின் பணி’, ரஸ்கின் எழுதிய, ‘கடையனுக்கும் கதி மோட்சம்’, டால்ஸ்டாயின் எழுத்துகள் ஆகியவை, காந்தியின் சிந்தனைகளுக்கு, பெரும் தூண்டுதலைக் கொடுத்தன. காந்தியின் கொள்கைகளை அப்படியே கடைபிடித்து வெற்றி கண்டவர், மார்டின் லூதர் கிங் ஜூனியர். காந்தி – கிங் ஆகியோரின் வாழ்வையும், சிந்தனையையும், போராட்டங்களையும் சுவைபட விவரித்திருக்கிறார் ஆசிரியர். கிங்கின் இறுதிச் சொற்பொழிவு, காந்தியின் இறுதி உண்ணாவிரதம்,
சொற்பொழிவு ஆகியவை, நூலில் சேர்க்கப்பட்டிருப்பது, மேலும் சிறப்பு.
மயிலை சிவா