முப்பது ஆண்டுகளுக்கு முன், ‘கலாகவுமுதி’ என்ற மலையாள வார பத்திரிகையை தொடர்ந்து படித்து வந்தேன். மலையாள எழுத்தாளர் மாதவிக்குட்டி எழுதிய, ‘நீர் மாதளம் பூத்த காலம்’ என்ற, வாழ்க்கை வரலாறு, தொடராக வந்த நேரம் அது. மாதவிக்குட்டியின் எழுத்தில் தென்பட்ட எளிமையும், கவித்துவமும், அமைதியான அழகும், உண்மை தொனியும் மனம் கவர, அவருடைய கதைகளையும், புனைவல்லாத பிற படைப்புகளையும் தேடிப் படித்தேன் அப்போது.
பிறகு, அவருடைய கட்டுரை மொழி, மாறுதல் அடைந்ததை உணர்ந்தேன். எல்லா திசையில் இருந்தும் தாக்கப்படும் பெண்ணாக, தன் இருப்பையும், செயல்பாட்டையும் சதா நியாயப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளவராகத் தன்னைச் சித்தரித்து எழுதப்பட்டவை, பின்னாளில் வந்த அவர் கட்டுரைகள்.
இடையில் மாதவிக் குட்டி, இஸ்லாம் மதத்தைத் தழுவினார். ‘மதம் மடுத்து’ (மதம் அலுத்துப் போனது) என்று, பாரம்பரியம் மிகுந்த, ‘மாத்ருபூமி’ தினப் பத்திரிகையில் பேட்டி கொடுத்தார். அந்த நேர்காணலில் கண்ட சத்திய தரிசனத்தால் கவரப்பட்டு, அதை நான் உடனடியாக தமிழில் மொழிபெயர்த்து பிரசுரம் செய்வதற்குள், ‘நான் அப்படி ஒரு பேட்டியே தரவில்லை’ என்று சொல்லி விட்டார், சுரையாவாகப் பெயர் மாறிய மாதவிக்குட்டி.
இந்தியாவில் அடைக்கலம் புகுந்து வசிக்கும் வங்கதேச தஸ்லிமா நஸ் ரீன் தன் எழுத்துகளில், தற்போது கட்டமைத்துக் கொண்டிருக்கும் துன்புறுத்தப்படும் பெண்ணின் பிம்பத்தை, மாதவிக் குட்டியின் நீட்சியாகவே காண்கிறேன். கட்டுரைகளில், இப்படியான தன் முனைப்பு தென்பட்டாலும், மாதவிக்குட்டியின் சிறுகதைகள் வசீகரமானவை. அவற்றில் வரும் பெண்கள் சுயமாக சிந்திப்போர்; துணிந்து செயல்படுவோர்; சமுதாயம் மாறும் என்று நம்புவோர்.
மாதவிக் குட்டியின் தேர்ந்தெடுத்த சில படைப்புகளை, தமிழில் மொழிபெயர்த்து தொகுப்பாக வந்திருக்கும் புத்தகம் இது. புத்தகத்தின் தலைப்பான, ‘இந்தப் பிறவியில் இவ்வளவு தான்’ தொடங்கிய கட்டுரைகளோடு, ‘மதில்கள், திருநங்கை, சந்தனச் சிதை’ போல், மலையாளத்தில் பரவலாக வாசித்துக் கொண்டாடப்படும் சிறுகதைகளும் இடம் பெற்றிருக்கும் நூல். மு.ந.புகழேந்தி தொகுத்தது.
சட்டென்று கவனத்தை ஈர்க்கும் எழுத்து மாதவிக் குட்டியுடையது.
‘என்னுடைய பலவீனங்கள் அவிழ்த்துப் போடப்பட்ட ஆடைகளாகும். அவற்றை எடுத்துத் துவைக்க எனக்கு நேரமில்லை; பொறுமையுமில்லை. பக்தியென்னும் திரை மட்டும் என் ஆத்மாவினுடைய நிர்வாணத்தைப் பிறர் கண்களிலிருந்து மறைத்து வைக்கிறது.’
தமிழுக்கு மிக நெருங்கிய மொழி மலையாளம் என்றாலும், மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த, நான் படித்த பல படைப்புகள் மனநிறைவைத் தரவில்லை. புகழேந்தி இந்தப் புத்தகத்தில் நேர்த்தியான மொழிபெயர்ப்பு மூலம் பெருவெற்றி அடைந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
எழுத்தாளர் இரா.முருகன்