‘தமிழர் திருமணத்தில் தாலி உண்டா?’ என்று, மா.ராசமாணிக்கனார், 60 ஆண்டுகளுக்கு முன் எழுதிய மிக நீண்ட ஆய்வுக் கட்டுரை, சிறு நூலாக வந்துள்ளது.
தமிழனுக்கு தாலி இல்லை என, இவர் எழுதினார். ‘தாலி உண்டு’ என, ம.பொ.சி., எழுதினார். ம.பொ.சி., கட்டுரையை மறுத்து, ‘தாலி இல்லை’ என்று, ‘தென்றல்’ இதழில் கண்ணதாசன் எழுதினார். எனினும், இன்று வரை இந்த விவகாரத்தில் தீர்ப்பு சொல்லப்படவில்லை.
கடந்த, 2,300 ஆண்டுகளுக்கு முன், சங்க காலத்தில் புலிப்பல் தாலியை சிறுவர் அணிந்துள்ளனர்.
சிலப்பதிகாரத்தில் அய்யர் நடத்திய திருமணத்திலும் தாலி இல்லை. மங்கல அணி என்பது தாலியைக் குறிக்காது. சீவக சிந்தாமணியில் கூறப்படும், ஒன்பது திருமணங்களிலும் தாலியை காணவில்லை என்று, முற்கால, பிற்கால இலக்கியங்களை ஆய்ந்து எழுதியுள்ளார் ஆசிரியர்.
கந்தபுராணத்தில் தெய்வானை திருமணத்தில் தான், தாலி அறிமுகமாகிறது. கம்பன், ‘மங்கையர் மங்கலத்தாலி’ பற்றி எழுதினாலும், சீதைக்கு ராமன் கட்டியதாக பாடவில்லை. ஆண்டாள் திருமண கனவில் கூட, தாலி கட்டுவதாக பாடவில்லை. சேக்கிழார் பெரியபுராணத்தில், குங்கிலிய கலய நாயனார் வரலாற்றில், தாலியை விற்று குங்கிலியம் வாங்கியதாக பாடினார். கேரள நாட்டினரின் தாலி கட்டும் வழக்கம் பற்றி விரிவாக, ஆசிரியர் ஆய்ந்துள்ளார். ஜாதி வாரியாக தாலி கட்டும் விவரம் மிக சுவாரசியமாக தரப்பட்டுள்ளது.
திருமணத்திற்கு முன்பே, தாலி தமிழருக்கு இருந்தது. பிற்காலத்து, அது கல்யாண தாலியாக மாறியது என்று தீர்ப்பு கூறியுள்ள இச்சிறிய நூல், அரிய தகவலை தருகிறது.
மா.கி.ரமணன்