புகழ்பெற்ற எழுத்தாளரும், நாடக ஆசிரியருமான, வில்லியம் ஷேக்ஸ்பியரை அறியாதவர் இருக்க முடியாது. அவரின் பிரபல நாடகங்களில், ஜூலியஸ் சீசர், ஹேம்லெட், ரோமியோ ஜூலியட் போன்றவை சாகா வரம் பெற்றவை. வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதிய, 36 அல்லது 38 நாடகங்களில், 20 நாடகங்களை, சிறுகதை வடிவில் ஆசிரியர் தந்திருக்கிறார். அவற்றில், சுபமுடிவு நாடகங்கள் 13; சோகமுடிவு நாடகங்கள், ஏழு. ஷேக்ஸ்பியரின் வாழ்க்கை வரலாற்றோடு, புத்தகம் துவங்குகிறது. ஒவ்வொரு நாடகத்திலும், கதை மாந்தர்கள் பெயர் மற்றும் அவர் யார் என்ற முன்னுரை தரப்பட்டிருப்பது, கதையோடு நம்மை ஒன்ற செய்கிறது.
ஒவ்வொரு நாடகத்திற்கும், பொருத்தமான ஓவியங்கள் வரைந்திருக்கிறார் முருகேசன். கதையை வாசிப்போருக்கு, ஓவியங்கள் பக்க துணையாக விளங்குகின்றன. மிக நீண்ட நாடகத்தை, 30, 40 பக்கங்களில், தெளிவாக சுருக்கி தந்திருக்கிறார் ஆசிரியர். இந்த நூலை, ஷேக்ஸ்பியர் நாடகங்களின் சிறு தொகுப்பு என கொள்ளலாம்.
சி.கலாதம்பி