தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்து, ஆந்திரத்தில் வேலை செய்யும், விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கையின் படப்பிடிப்பு இந்த நாவல். நூல் ஓட்டம் சினிமா திரைக்கதை போலவே செல்கிறது. நூலாசிரியர், தானும் ஒரு அங்கமாக இருந்த கூட்டத்தின், அவலங்களின் உண்மை பின்னணியில் படைக்கப் பட்டது.
உள்ளூர் முதலாளியிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல், பயந்து, புலம்பெயர்ந்து, வயிற்று பிழைப்புக்காக வேற்று முதலாளியிடம் அடிமையாகி, காலமெல்லாம் உழல்கிறது அப்பாவி தொழிலாளர் வர்க்கம்.
அனைவரையும் தோழராக்கி, புரட்சி கற்பித்து போர்க்கொடி தூக்கி, ஆதிக்கத்திலிருந்து விடுபடுவது சாத்தியமாகிறது. நூற்றாண்டுகள் கடந்தாலும், இந்த சமூக வலிகள் தொடர்கின்றன. பணபலமும், ஆள்பலமும் இருந்துவிட்டால், மனிதனே மனிதனுக்கு அடிமை செய்வதும், பெண்மையை ஒரு கடைச் சரக்கைவிட மலிவாக்குவதும், இங்கும் விதிவிலக்கு அல்ல.
நாவல் எங்கிலும் கம்யூனிச சித்தாந்தங்கள், கூர்மையான பெண்ணிய சிந்தனைகள், பொதுவுடைமை கருத்துகள், அதிகார வர்க்கத்தின் கொடூரங்கள், திக்கற்ற ஒரு கூட்டத்தின் மனப்பிரளயங்கள், காதல், நட்பு, துரோகம் என்று பல்வேறு சூழல்களை காட்சிப்படுத்தி, உணர்ச்சி களங்களை நேர்த்தியாய் நெசவு செய்து, கண்முன் நிறுத்துகிறார் நூலாசிரியர் பாரதிநாதன்.
நெரிசல் இல்லாத கதாபாத்திரங்கள், உரையாடல்கள், படிப்போருக்கு தாக்கம் ஏற்படுத்தவல்ல காட்சி நகர்வுகள், நாவலுக்குக் கூடுதல் கனம் சேர்க்கின்றன. நாவலில் வருவோர் இயல்பான கதை மாந்தர்கள், வழக்கு சொற்கள், நியாயப்படுத்த முடிந்த மனக்கொந்தளிப்புகள். எண்ணற்ற காட்சிகள் கண்முன்னேயே நடப்பதுபோல் தோன்றுகின்றன.
தறியின் ஊடுநூல் நெருக்கங்களில், பொன்சரிகை மின்னுவதுபோல், களங்களுக்கு பொருத்தமான இலக்கிய தரமான வர்ணனைகளும், காணக் கிடைக்கின்றன.
நூலாசிரியரின் அனுபவ தாக்கத்திலிருந்து, எழுதப்பட்ட படைப்பு என்பதால், நூலின் உள்ளடங்கிய சம்பவங்களால், மனதில் கனம் ஏற்படுகிறது.
உடை கலாசாரம், குப்பையிலிருந்து மின்சாரம், புகைபிடிப்பது, பெண்கள் மறுவாழ்வு, ஜாதி மறுப்பு சிந்தனை போன்றவற்றின் மீதான தன் பார்வையை முன்வைக்கும் இடங்களில், ஆசிரியரின் சமூக நோக்கும், ஆதங்கமும், புலப்படுகின்றன. பல பக்கங்களில் தொய்வு ஏற்படுத்தும், நீளமான உரையாடல்களை குறைத்திருக்கலாம். வரவேற்க வேண்டிய நாவல்.
– கவிஞர் பிரபாகர பாபு