மருதுபாண்டியர் குறித்து, ரெவரன்ட் பாதர் பாச்சி எழுதியுள்ள, ‘மருதுபாண்டியன் – தி பேட்புல் எய்ட்டீன்த் செஞ்சுரி’ எனும் இந்த நூல், குறிப்பிடத்தக்கது. 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தமிழகத்தில் சமயப்பணி ஆற்றிய, கத்தோலிக்க பிரெஞ்சுப் பாதிரியாரான பாச்சி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆட்சியாளர்களிடம் பழகியுள்ளார்.
அரசு நடவடிக்கைகள், ஆங்கிலேயர்களின் அதிகார குறுக்கீடுகள், பாளையக்காரர்களின் கிளர்ச்சிகள் என, பலவற்றை, தன் குறிப்பேடுகளில் பதிவு செய்துள்ளார். குறிப்பாக, மருது சகோதரர்கள், சிவகங்கை மன்னர் முத்து வடுக நாதத் தேவரின் அணுக்க ஊழியர்களாக இளம் வயதில் பணியாற்றியதையும், பின், கடின உழைப்பாலும், வீரத்தாலும் உயர்ந்து, ஒரு நெருக்கடியான தருணத்தில், ஆட்சியாளர்களாக பொறுப்பேற்றதையும், கண்ணால் கண்டவர் இவர்.
மருதுபாண்டியர்களை அழித்ததும், அவர்கள் குடும்பத்தை நாசம் செய்ததும், ஆங்கிலேயர்கள் செய்த மன்னிக்க முடியாத தவறு, அநீதி என்பதை, தக்க ஆதாரங்களுடன் நிறுவியுள்ளார் இந்த நூலில். மு.பாலகிருஷ்ணனும், எஸ்.ஆர்.விவேகானந்தமும் இதை தமிழில் கொண்டு
வந்திருப்பது, மகத்தான பணி.
– கவுதம நீலாம்பரன்