சென்னை நகர் தோன்றிய, 300வது ஆண்டு நிறைவை ஒட்டி, 1939ல் வெளியான மலரில் இடம்பெற்றிருந்த, 50 கட்டுரைகளில், டாக்டர் ஏ.லட்சுமணசாமி முதலியார், கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, எம்.சி.எல்.எம்.சிதம்பரம் செட்டியார், பி.சாம்பமூர்த்தி, பி.ஜெ.தாமஸ், ஜோசப் ப்ரான்க்கோ, டாக்டர் முகமது உசைன் நயினார் போன்ற பல அறிஞர்கள், ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகள், இதில் தமிழ் வடிவம் பெற்று உள்ளன. மொத்தம், 32 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
‘பழைய மதராசின் முதல் பாய்ச்சல், 1670ல் துவங்கியது; இரண்டாவது முன்னேற்றம், ராயபுரத்திலிருந்து ஆற்காடு வரை ரயில்பாதை நிறுவப்பட்ட 1856ம் ஆண்டு; மூன்றாவது முன்னேற்றம், 1875ல் துறைமுகம் தோன்றிய ஆண்டு. மதராஸ் துறைமுகம் தான் அடிமை ஏற்றுமதியை ஒழித்த, முதல் நகரமாக திகழ்ந்தது’ (பக். 9).
சென்ன கேசவப்பெருமாள் கோவில், முதலில் கோட்டைப் பகுதியில் இருந்தது. கோவில் கட்டப்பட்ட பிறகே அந்த இடம் சென்ன கேசவப்பட்டணம் அல்லது சென்னை கேசவபுரம் என்று அழைக்கப்பட்டுள்ளது (பக். 26) ‘மதராசில் ஓர் இந்தியரால் ஆரம்பிக்கப்பட்ட முதல்
பத்திரிகை, ‘கிரசன்ட்’ (பக். 46). எழும்பூர் எனும் பெயர் பலவிதமாக சிதைவடைந்து காணப்படுகிறது. எழும்பூர், எகுமூர், எகம்பூர், ஏகமோர்’ (பக்.266). பெரிய தம்பி மரைக்காயர் எழுதிய, ‘நொண்டி நாடகம்’ நூலில் தான், ‘சென்னப்பட்டணம்’ என்ற பெயர் முதன்முதலில் வருகிறது (பக். 338). 1896ல் துவங்கப்பட்ட கன்னிமாரா நூலகம், கட்டணம் ஏதும் வசூலிக்காத நூலகம் (பக். 406). ‘மற்ற இடங்களோடு ஒப்பிடும்போது, மதராசில் தான் அதிக எண்ணிக்கையில் சங்கீத சபாக்கள் இருக்கின்றன (பக். 425). இப்படி ஏராளமான தகவல்களைக் கொண்ட இந்த நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் அனைத்தும் படிக்க சுவாரசியம் ஊட்டுபவை.
பின்னலூரான்