சரித்திர நாவல். பிற்கால சோழர்களின் தொடக்க காலத்தை தேர்ந்தெடுத்து, (கி.பி. 9ம் நூற்றாண்டு) விஜயாலய சோழனின் வரலாற்றை, தக்க சரித்திர சான்றுகளை ஆதாரமாக கொண்டு, கொஞ்சம் கற்பனையும் கலந்து, சுவாரசியமான கதையை பின்னியுள்ளார், ந. மணிவாசகம். பழையாறையை தலைநகராக கொண்டு, ஆட்சி செய்து, சிற்றரசனாக இருந்த சோழ வம்சத்தின் விடிவெள்ளியான விஜயாலயன், சோழ சாம்ராஜ்யம் அமைக்க எண்ணி எப்படி துணிந்து, எவ்வாறு முன்னேறினான் என்பதே, நாவலின் மையக்கரு.
விஜயாலயன் முத்தரையர்களை வென்று, தஞ்சையை கைப்பற்றி கொண்டதில் இருந்து தான், தஞ்சை மாநகரம், சோழர்களின் தலைநகரானது. அதற்காக அவன் எதிர்கொண்ட துன்பங்கள், சந்தித்த சவால்கள் என, விரிகிறது வரலாறு.
விஜயாலயன், தன் புதல்வன் ஆதித்தனுக்கு சாம்ராஜ்ய கனவை மூட்ட, அவன் படிப்படியாக சோழநாட்டை விரிவுபடுத்தி, பெரும் சாம்ராஜ்யமாக மலரச்செய்தான் என்பதன் ஒரு துளியே, இந்த நாவல். இது, படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது.
ஸ்ரீநிவாஸ் பிரபு