திண்டுக்கல், கோவை, பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் வசிக்கும் அருந்ததியர்களான, மாதாரிகளின் வாழ்க்கையை இந்த நாவல் சித்தரிக்கிறது.
பள்ளர், பறையர், அருந்ததியினர் என, மூன்று முக்கியமான ஜனத்தொகை அதிகமுள்ள தலித் உட்பிரிவுகளில், அருந்ததியினரே எல்லா விதத்திலும் மிக மோசமாகப் பின்தங்கி உள்ளனர் என்பது, இந்த நாவலைப் படிக்கும் எவருக்கும் புரியும் கசப்பான உண்மை.
மண்ணின் மைந்தர்களான சின்னான், குப்பாயி, வெள்ளச்சி, நல்லச்சி, அருக்காணி முதலிய குகைச்சித்திரங்களும், மாதாரிகளை ஆட்டிப் படைக்கும் ஆதிக்க ஜாதியினரான மலைச்சாமி கவுண்டர், ஆனஞ்சோத்து கவுண்டர், வத்தப்ப கவுண்டர் முதலிய கதாபாத்திரங்களும் நெஞ்சை விட்டு அகலாத வார்ப்புகள்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் மாதாரிகள் எப்படி விலங்கிலும் கீழாக நடத்தப்பட்டனர் என்பதை, ஆசிரியர் விளக்குகிறார்.
அம்பேத்கர் சொல்வதைப் போல், கலப்பு மணங்களே, இந்திய தேசத்தின் ஜாதிக் கொடுமைகளை, வேரறுக்கும் ஆயுதம் என்பதை ஆசிரியர், இந்த புதினத்தில் வலியுறுத்துகிறார்.
எஸ்.குரு