விழாக்கள், பண்டிகைகள், விரதங்கள், நோன்பு ஆகியவை காலம் காலமாய் இந்தியாவில் கடைப்பிடிக்கப்பட்டு வருபவை. அவை நம்
கலாசார, பண்பாட்டின் அடையாளங்கள். பொதுவாக, விழாக்கள் பண்டிகைகளின் போது மகிழ்ச்சி பொங்க உறவினர், நண்பர்களுடன் கூடி விருந்துண்டு, ஆடிப்பாடிக் களிக்கிறோம். நோன்பு, விரதம் ஆகியவற்றின்போது சிரத்தையுடன் நீராடி, அவரவர் மதச் சின்னங்களை அணிந்து உபவாசமிருக்கிறோம்.
வடக்கே ஜம்மு – காஷ்மீரிலிருந்து, தெற்கே தமிழகம் வரை, வடக்கு தெற்காக, கிழக்கு மேற்காக எத்தனையோ மாநிலங்கள், அவற்றில்
பல மதங்கள், ஜாதிகள், மொழிகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், பண்டிகைகள், விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் பின்னணியில் ஒவ்வொன்றிற்கும் ஒரு புராணக் கதையோ, வரலாற்று நிகழ்வோ அல்லது ஏதோ ஒரு தத்துவமோ நிச்சயம் இருக்கும்.
நூலாசிரியர் அவை அத்தனையையும் இந்த ஒரே நூலில் திரட்டித் தந்திருக்கிறார். அத்துடன், அந்தந்த பிரதேசங்களுக்கு செல்ல நேர்ந்தால், அங்கு தங்கக்கூடிய இடங்கள் பற்றிய குறிப்புகளையும் தந்திருக்கிறார். பாராட்டத்தக்க முயற்சி.
மயிலை சிவா