பாட்டு ஆயுதம் ஏந்தி போராளிகளாக மாறி, பாரத விடுதலைக்கு பாடுபட்டோர் அநேகர். அத்தகு அரும் பணியால் சிறந்து ஒளிரும் புகழ்மிக்க மகாகவி பாரதி, பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், ஜீவா, விசுவநாத தாஸ், பாஸ்கர தாஸ், கே.பி.சுந்தராம்பாள் போன்ற பெருமக்களின் போராட்டச் செய்திகளோடு, அவர்தம் வாழ்க்கைச் சரித நிகழ்வுகள் பலவற்றையும் சேர்த்து தொகுத்து எழுதியுள்ளார் முனைவர் சொ.சேதுபதி.
ஆழ்ந்த தமிழ்ப் புலமைமிக்க அறிஞர் என்பதால், ஒவ்வொருவர் பற்றியும், அவர் நுண்மாண் நுழைபுல ஆய்வுகளோடு செய்திகளை திரட்டி தந்துள்ளார். முதல் கட்டுரையே, வடலூர் ராமலிங்க வள்ளலார், ‘கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக’ என்று முழக்கமிட்டதை விவரிக்கிறது.
‘மனுமுறை கண்ட வாசகம்’ வள்ளலாரின் சமகால அரசியல், சமுதாய வாழ்வியல் சாசனமாக ஒளிர்வதைச் சுட்டிக் காட்டுகிறார். பாரதியின், ‘வந்தே மாதரம்’ பிறந்த கதை, திருமண வீட்டில் இளைஞர் கனக சுப்புரத்தினம், பாரதி முன்னால் அவர் பாடிய, ‘வீரசுதந்திரம் வேண்டி நின்றார்’ பாடலைப் பாடி, அறிமுகமாகி, பாரதிதாசனான சூழல், குவளைக் கண்ணனின் தாய் பாதியிடம் சுப்ரபாதம் பாடு என்றதும், ‘பாரத மாதா திருப்பள்ளியெழுச்சி’ பாடலைப் பாடிய விதம் ஆகியவை நெஞ்சம் நெகிழ்ந்து, நெக்குருக வைக்கும் அருமையான ஆவணப் படப்பிடிப்பாக மிளிர்கிறது.
பெயர் அறியப்படாத பெருங்கவிகள், கூத்துக் கலைஞர்கள் சிலரின் பாட்டுப் போரையும், நூலில் இடம்பெறச் செய்துள்ளார். வேளாண் விழிப்புணர்வு போராளி நம்மாழ்வார் பற்றிய அரிய செய்திகளும், இதுவரை எவரும் அறியாதவை தான். ‘குறுகத் தரித்தல்’ என்பது போன்று, விரிக்கிற் பெருகும் வீரவரலாறாக, ஒவ்வொரு கட்டுரையும் திகழ்கிறது.
கவுதம நீலாம்பரன்