நம் தமிழ் சூழலில், அறிவியல் நூல்களின் வரத்து கம்மிதான். இந்த நிலையில், அருண் நரசிம்மனின், இந்த நூல், தமிழில் அறிவியலை வாசிக்க விரும்புவோருக்கு ராஜ விருந்து. ஹளேபீடு சிற்பங்களை அருமை பெருமைகளை விளக்கிச் சொல்ல, ஒரு சிற்பக்கலை வல்லுனரே நம் உடன் வந்தால் எப்படி இருக்கும்; அப்படி இருக்கின்றன, சென்னை ஐ.ஐ.டி.,யில் பணியாற்றும் நூலாசிரியரின் அறிவியல் கட்டுரைகள்.
இந்த தொகுப்பிலுள்ள, 25 கட்டுரைகளில் உயிரியல், இயற்பியல், கணிதம், வினோதவியல் (க்விர்காலஜி), வேதியியல் என்று அறிவியலின் பல பிரிவுகளையும் நூலாசிரியர், நகைச்சுவை கலந்து விளக்குகிறார். கோவில் சிற்பங்களில் கணிதத்தையும்,
பிஸ்கெட்டில் இயற்பியலையும், மாவு மிஷினில் ‘மோபியஸ்’ பட்டையையும் அறிவியல் மனம் எப்படி பார்க்கிறது என்பதை, தமிழில் சரளமாக நமக்குக் காட்டுகிறார் அருண் நரசிம்மன். அறிவியலை ‘போரடிக்காமல்’ வாசகரை சாய்வு நாற்காலியில் ஓய்வாக அமர்ந்தபடி, வாசிக்க வைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார். அவரது அடுத்த தொகுப்பு எப்போது என்ற ஆர்வத்தை தூண்டுகிறது இந்நூல்.
இதுபோன்ற அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பு நூல்கள், ஆண்டுக்கு, நான்கு டஜன்களாவது வரவேண்டும். அப்படி வர ஆரம்பித்தால், அது அறிவியல் தமிழுக்கு ‘பிளாட்டின’ யுகம்.
சசி