இக்கால கல்வி சூழலின் நிலையை உணர்ந்து, இந்த தலைப்பை, நூலாசிரியர் வைத்துள்ளார். தற்போது தமிழகத்தில் கல்வித் துறையில் நிலவும் சிக்கல்களை தகுந்த தரவுகளுடன் ஆராய்ந்து, அவற்றுக்கான விடையையும் தந்துள்ளார் நூலாசிரியர். இன்று, பெற்றோர் தமது சுயகவுரவத்திற்காகவும், தான் அடைய நினைத்த, நினைக்கும் இலக்கினை பிள்ளைகள் அடைய வேண்டும் என்பதற்காகவும், குழந்தை பிறந்த உடனே, தேடித் தேடி அலைந்து, நல்ல பள்ளியில் சேர்க்கத் துடிக்கின்றனர்.
அவ்வாறு தேடுவதற்கு முன்பு அனைத்து பெற்றோரும் படிக்க வேண்டிய நூல் இது. அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களை தங்களது குழந்தைகளாக எண்ணி, அவர்களை பயிற்றுவிக்க வேண்டும். இதற்கு நல்ல உதாரணங்களாக விளங்கும் பள்ளிகளை, ‘அசத்தும் அரசு பள்ளிகள்’ என்ற தலைப்பில், நூலாசிரியர் விவரித்துள்ளார். தமிழகத்தில் உள்ள பல்வேறு பாடத்திட்டங்களையும் ஒப்பிடுகிறது நூல். மேலைநாடுகளில், ஒரே பாடத் திட்டம், தாய்மொழிக்கு முக்கியத்துவம், வீட்டிற்கு அருகில் இருக்கும் பள்ளியில் கல்வி கற்க வழிவகை ஆகியவை அமலில் இருப்பதையும் நூல் சுட்டிக் காட்டுகிறது. சமகாலத்திய கல்விமுறை, மாணவர்களிடையே தாழ்வு
மனப்பான்மையினையும், போட்டி மனப்பான்மையினையும், கசப்பு உணர்வினையும் தருவதை, நூலாசிரியர் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.
இந்த பிரச்னைக்கு தீர்வாக, ‘தங்களின் கோரிக்கையை நோக்கி அரசை பணிய வைக்கும் அளவுக்கான, பெருந்திரள் மக்கள் போராட்டங்கள் மூலம் தான், இதற்கு தீர்வு காண முடியும். அனைவருக்கும் இலவசக் கல்வி, அருகாமைப் பள்ளி முறையை உறுதி செய்வது, பொதுப்பள்ளி முறையை சாத்தியப்படுத்துவது, தாய்மொழிக் கல்வியை உத்தரவாதப்படுத்துவது ஆகியவை, நமது கல்விச் சூழலை ஆரோக்கியமானதாக மாற்றி அமைப்பதற்கான கோரிக்கைகள்’ (பக்.239) என்கிறார், நூலாசிரியர்.
ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் போன்றோரின் கல்வி பற்றிய கருத்துகளையும் நூலில் சேர்த்துள்ளார். இதுவரை வெளிவந்துள்ள கல்வி குறித்த நூல்கள், பயன்படுத்திய தரவு நூல்கள் பட்டியல், இணையதள முகவரிகள் நூலின் பின் இணைப்பாக தரப்பட்டுள்ளன.
தமிழ்ச் சமூகம், கல்வி நிலையில் முன்னேற்றம் அடைய, இந்த நூல் பெரிதும் துணைபுரியும்.
– முனைவர் இராஜ.பன்னிருகை வடிவேலன்