ஜல்லி உடைக்கும் கூலித் தொழிலாளிகளின் கண்ணீர்க் கதை தான் இந்த நாவல். நூலாசிரியரின் முதல் நாவல் இது. வறுக்கும் உச்சிவெயிலில் கல்லுடைத்து வாங்கும் சொற்ப கூலியில் கஷ்ட ஜீவனம் நடத்தும் ராசப்பனின் குடும்பம் கதையில் மையமாகிறது. முக்காலும் ஒரு குடும்பத்தைச் சுற்றிச் செல்லும் நாவலில், வருத்தும் வறுமை, இழவு, இழிவு, வஞ்சகம், நோய், மனவலிகள் என்பதாக ஓடுகிறது கதை.
அதற்குள்ளும் காதல், கல்யாணம், சடங்கு, சம்பிரதாயம், மான, மரியாதை, வைராக்கியம், வீரியம் இத்யாதிகள்...! இடையிடையே பெண் பித்தன் கொத்துக்காரன் மாணிக்கத்தின் அடாவடிச் சேட்டைகள்; பிரச்னைகள். ஊமைக்காயங்கள், உள் அழுகைகள் ஒவ்வொரு நாளும்.
அதிலும், தன்மானத்தையும், வருமானத்தையும், பெண்மையையும் காப்பாற்றிக் கொள்ள தத்தளித்தபடி சோற்றுக்கும், மருத்துவத்துக்கும் போராட வேண்டியிருக்கிறது. அந்த வேலையையும் இழந்து பரிதவித்து, கூட்டமாய் ஊருக்குத் திரும்பும்போதும் அவர்களை விடுவதாயில்லை ஊழ்வினை.
முற்றிலும் வழக்குச் சொற்களைப் பயன்படுத்தி நாவலைக் கொண்டு செல்கிறார் நூலாசிரியர். வறுமையின் கோரங்களை தோரணம் போட்டு காட்டியிருக்கிறார். அங்கும் இங்கும் சில நேசம் மிக்க காட்சிகள் நெகிழ வைக்கின்றன.
கவிஞர் பிரபாகரபாபு