நாட்டின் தலைவராக வருபவரின் பலம், பலவீனம் மற்றும் விருப்பு, வெறுப்பு ஆகியவையே, நாட்டின் போக்கை தீர்மானிக்கின்றன. கட்சியிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும், சர்தார் பட்டேலுக்கு ஆதரவு இருந்த போதும், காந்தியின் விருப்பம் ஒன்றே, நேருவை இந்தியாவின் முதல் பிரதமராக்கியது.
நேருவின் விருப்பு வெறுப்புகள் எப்படி, நாட்டின் போக்கை தீர்மானித்தன என்பதை விளக்குகிறது இந்த நூல். ஒரு நாடு உருவாகும் காலத்தில் ஏற்படும் ஆரம்பகால பிரச்னைகள், அதை நேரு எதிர்கொண்ட விதம், சமாளித்தது, சொதப்பியது, தோற்றது ஆகியவற்றை நடுநிலையுடன் ஆராய்கிறது இந்த நூல்.
காஷ்மீரை கைப்பற்ற பாகிஸ்தான் படையெடுத்தது; வெற்றி இந்தியாவின் கையருகே இருந்தபோது போர் நிறுத்தம்; ஐ.நா., மன்றத்திற்கு பிரச்னையை கொண்டு சென்றது; 370வது சட்டப்பிரிவு என, இன்று தொடரும் பிரச்னைக்கு காரணம்; நேரு – ஷேக் அப்துல்லாவின் நட்பு; அப்துல்லாவின் துரோகம் என, பல்வேறு பிரச்னைகளை ஆராய்கிறது.
நேரு சிறந்த ஜனநாயகவாதியாக இருந்தார். ஆனால், ஜனநாயக ரீதியாக கேரளாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் ஆட்சியை, அதிகாரத்தை பயன்படுத்தி கலைத்தார். காரணம், மகள் இந்திரா மீதிருந்த பாசம். பஞ்சசீல கொள்கை, ‘இந்தி – சீனி பாய் பாய்’ கோஷம் என, நேரு அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தபோது, சீனா, திபெத் மீது படையெடுத்து கையகப்படுத்திக் கொண்டது.
தப்பி வந்த தலாய்லாமாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்தது. கடுப்பான சீனா, இந்தியா மீதும் படையெடுத்து அருணாசலத்தை கைப்பற்றியது. அப்போது ரஷ்யாவும், சீனாவுக்கு ஆதரவு அளித்தது. ஜான் கென்னடி தலைமையில் இருந்த அமெரிக்கா தான் இந்தியாவுக்கு ஆதரவு கொடுத்தது. இது நேருவின் அயலுறவு கொள்கைக்கு கிடைத்த பெரும் தோல்வி. காரணம், உண்மை நிலை குறித்து பட்டேல் எச்சரித்தும் கூட, கவலைப்படாமல் கனவில் இருந்தது தான். அவரது தோல்வியை நூலாசிரியர் ரமணன், ‘அது தனி நபர் தோல்வியல்ல.
அமைச்சரவை, உளவுத்துறை, ராணுவ தலைமை ஆகிய அனைத்தும் சேர்ந்த கூட்டு தோல்வி. இந்தியாவின் தோல்வி’ என்று எழுதி இருப்பது நடுநிலை தவறியதாகவே உள்ளது.
சோஷலிச பொருளாதார கொள்கை, பொதுத்துறை அனைத்திலும் அரசின் ஆதிக்கம் என்ற நேருவின் கொள்கைகள், அன்றே ராஜாஜியால் எதிர்க்கப்பட்டன. நேருவின் பேரனான ராஜிவ் காந்தியாலேயே நேருவின் கொள்கைகள் கைவிடப்பட்டது, ஒரு நகை முரண் தான்.
திருநின்றவூர் ரவிக்குமார்