‘ஐம்புலன்களைக் கட்டி உள்ளத்தை ஓரிடத்தே நிறுத்துவது ஞானம்’ எனும் அருட்செல்வரின் முன்னுரையோடு துவங்கும் இந்த தொகுதிகளில், 30 மகான்களின் வாழ்வு–வாக்கு–பணி பற்றி, 29 தமிழறிஞர்கள் சொல்லோவியம் தீட்டியுள்ளனர்.
தொகுதி – ௧ல், திருஞானம்பந்தர், வாதத்தில் தோற்ற சமணர்களை கழுவேற்றிய சம்பவம், தேவாரத்தில் இல்லை; நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதியினை ஒட்டியே, சேக்கிழார் அதை குறிப்பிட்டுள்ளார் என்பதை, மரபின் மைந்தன் முத்தையா முதல் கட்டுரையில் விளக்கமாய் வடித்துள்ளார்.
திருநாவுக்கரசரின் வாழ்வையும், வாக்கையும் இராம.இருசுப்பிள்ளை, தெய்வீக நூலாக வழங்கியுள்ளார். சுந்தரர் பற்றிய கட்டுரையில், ‘யோகமும், போகமும்’ பற்றி ஓஷோ (பக்.11) பற்றிய கருத்தும் சுட்டப்பட்டுள்ளது; விளக்கிய முறையும் சிறப்பு.
தொகுதி – 2ல், மாணிக்கவாசகர், 63 நாயன்மார் வரிசையில் இடம் பெறாதது, அவர் சுந்தரர் காலத்திற்குப் பிற்பட்டவர் (பக்.30) என்பதால் தான் என, ஆய்வு நோக்கில், தெ.ஞானசுந்தரம், நிறுவி உள்ளார். திருமதி தரணி பாஸ்கர் காரைக்கால் அம்மையார் பற்றி எழுதி உள்ளார். ‘சைவ சமய வளர்ச்சிக்கான கூறுகளை, கோவில்களை விடுத்து வீதிகளில் தேட வேண்டும் என்ற எண்ணம், சேக்கிழாராலேயே முதன்முதல் தோற்றம் கொண்டது’ (பக்.28) என, இரா.செல்வகணபதி, சேக்கிழார் குறித்து எழுதியுள்ளார்.
தொகுதி – 3ல், ஆண்டாளைப் பற்றி முனைவர் நிர்மலா மோகனும், திருமாலைத் தவிரப் ‘பெருமாள்’ எனச் சிறப்பிக்கப்படும் குலசேகர ஆழ்வார் குறித்து முனைவர் கா.அரங்கசாமியும், திருமங்கை ஆழ்வார் திருப்பணிகள் பற்றி முனைவர் அமுதன் படைப்பும், வைணவ சித்தாந்தங்களை உணர்த்துகின்றன.
தொகுதி – 4ல், பெரியாழ்வார் பற்றி திருமதி. தரணி பாஸ்கரும், சடகோபராகிய நம்மாழ்வார் பற்றி முனைவர் வசந்தாள்; வடகலை நெறிக்குப் பணிபுரிந்த வேதாந்த தேசிகர் குறித்து திருமதி. பிரேமா நந்தகுமாரும், வைணவத்தின் மேன்மையை எடுத்தாண்டுள்ளனர்.
சமயப் புரட்சியாளர்கள், தொகுதி – 5ல் இடம் பெற்றுள்ளனர். துவைதத் தத்துவத்தைப் போதித்த மத்வர் குறித்து, சுதா சேஷையனும், திருப்பதியை வைணவர்களுக்கு உரிமையாக்கி, ‘கோயிலொழுகு’ விதி வகுத்த சமூகப் புரட்சியாளர் ராமானுஜர் பற்றி ம.பெ.சீனிவாசனும்; ‘எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க’ என மொழிந்த, சமரச சுத்த சன்மார்க்கம் கண்ட வள்ளலார் பற்றி முனைவர் ம.ரா.போ.குருசாமியும் எழுதிய கட்டுரைகள், இந்த தொகுதிக்கு சிறப்பாய் உள்ளன.
தொகுதி – 6ல், பன்னிரு திருமுறைகளில் சாத்திர நூலாகக் கருதப்படும் பத்தாம் திருமுறையான, திருமந்திரம் அருளிய திருமூலர் – திருமந்திரத்திரட்டு குறித்து அ.அறிவொளியும், அருள்நந்தியாரின் ஆணவ வடிவைச் சுட்டி அவரைத் தம் மாணாக்கராக்கிய, மெய்கண்டார் குறித்து முனைவர் ந.இரா.சென்னியப்பனாரும், பக்தியும், தத்துவமும் சமரச ஞானத்தோடு சேர்ந்து மானுட நேயம் வளர்த்த தாயுமானவர் பற்றி முனைவர் இ.சுந்தரமூர்த்தியின் எழுத்தோவியமும் அலங்காரமா உள்ளன.
தொகுதி – 7ல், கான்ஸ்டென்டைன் பெஸ்கி என்ற இயற்பெயரை, வீரமாமுனிவர் என்று மாற்றி, சமயத் தொண்டாற்றிய இத்தாலியரின் சிறப்புகளை, தேம்பாவணியின் பெருமைகளை, இரபிசிங் படைத்துள்ளார்.
இஸ்லாமிய அறிஞர் குணங்குடி மஸ்தான் குறித்து தக்கலை பஷீரும், தேசியக்கவி பாரதி பற்றி சிற்பி பாலசுப்பிரமணியமும் கட்டுரைகள் தந்துள்ளனர். தொகுதி – 8ல், பேரூர் தவத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகள், சாந்தலிங்கரின் வீரசைவ நெறியையும், அருட்பணியையும் வைராக்கிய சதகத்தையும் விரிவாக எடுத்துரைத்துள்ளார். கொங்கு நாட்டு கந்தசாமி சுவாமிகளின் கவுமார நெறிச் சிறப்பை ப.வெ.நாகராசனும், சுவாமி சித்பவானந்தர் தொண்டுகளை மாரியப்பனும் எழுதியுள்ளனர்.
தொகுதி – 9ல், கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாசர் தமிழ்த்தொண்டு பற்றி முனைவர் மனோன்மணியும், சிவஞான முனிவர் குறித்து முனைவர் வே.செல்லாத்தாளும், ‘தமிழ்மொழிக் குயர்மொழி தரணியில் உளதெனில் வெகுளியற்றிருப்போன் வெறும் புலவோனே’ (பக்.32) என்று தமிழை மதியாத் தமிழ்ப் புலவனை இகழ்ந்துரைத்த வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பற்றி முனைவர் ந.சொக்கலிங்கமும் படைப்புக்களைத் தந்துள்ளனர்.
இறுதியாக தொகுதி – 10ல், ஆதிசங்கரர், அருணகிரியார், குமரகுருபரர் ஆகியோர் குறித்து முறையே எஸ்.வைத்தியநாதன், கு.வெ.பாலசுப்ரமணியன், முனைவர் இரா.மோகன் ஆகியோர் தனித்தனியே எழுதியுள்ளனர்.
மேற்கண்ட தொகுதிகளில் இடம்பெறாத அவ்வையார், பட்டினத்தார், திருப்போரூர் சிதம்பரம் சுவாமிகள், பாம்பன் சுவாமிகள் போன்ற அருளாளப் பெருமக்களின் திருத்தொண்டு, ஞானபரம்பரையின் அடுத்த தொகுதியிலாவது இடம்பெற வேண்டியது அவசியம்.
இந்த தொகுதிகள் வர மூலகாரணமாயிருந்த அருட்செல்வரின் தமிழ்ப்பணியும், திருப்பணியும், தமிழுலகம் மறக்கவியலாத அருட்பணியாகும்.
பின்னலூரான்