முகப்பு » பெண்கள் » கவிஞர்களின்

கவிஞர்களின் பார்வையில் காரிகைகள்

விலைரூ.95

ஆசிரியர் : ப. முத்துக் குமாரசுவாமி

வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ்

பகுதி: பெண்கள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
‘பெண், வீட்டிலும், நாட்டிலும் எவ்வாறு போற்றப்படுகிறாள்’ என்பதை, ஏட்டில் கவிஞர்கள் எப்படி தீட்டியுள்ளனர் என்று இந்த நூல் காட்டுகிறது.
‘உலகில் முதன்முதலில், ‘தாய் ஆட்சி தான்’ இருந்தது. தாயின் வழியே குடும்பமும், கூட்டங்களும் அறியப்பட்டன. ஆனால், ஆண் ஆதிக்கத்தால் பிறகு தலைகீழாக மாறிவிட்டன’ என்று துவங்குகிறது ஆய்வுப் பயணம். வீட்டுப் பராமரிப்பு, பயிரிட்டு பாதுகாத்தல், பிள்ளைப்பேறு என, பெண்ணின் பங்களிப்புகள் காலமாற்றத்தால் மாறி, பெண்கள் அடிமைகள் ஆக்கப்பட்டனர்.
சங்கப் பாடல்களில் தெரியும் மகளிர் உயர்வும், காப்பிய காலங்களில் எழுந்த மகளிர் துறவும், கம்பன் போற்றிய மகளிர் எழிலும், சமயங்களின் ஆதிக்கத்தில் மகளிர் தொண்டும், பாரதி, கண்ணதாசன் காலத்தில் மகளிரின் புரட்சியும் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
‘காதல், களவு, கற்பு’ என்ற தொல்காப்பிய இலக்கணச் சொற்களுக்கு, சங்க இலக்கிய உதாரணங்கள் கூறி, மங்கையரின் மகத்தான பண்புகள் விளக்கப்பட்டுள்ளன.
சங்ககாலப் பெண்கள் தாலி அணிய வில்லை. ஆண்டாள் கண்ட திருமணக் கனவில் கூட, தாலி கட்டியதாகக் கூறவில்லை. பத்தாம் நூற்றாண்டின் இறுதி வரை, தாலிகட்டும் வழக்கம் இல்லை. கி.பி., 5 ஆம் நூற்றாண்டுக்குள் புரோகிதச் சடங்குகள் திருமணத்தில் புகுந்தன என்கிறது நூல்.
‘ராமாயணம், பெண்களால் துவங்கப் பெற்று, பெண்களால் முடிக்கப்படும் காவியம். கோசலை, கைகேயி, தாரை, மண்டோதரி, சூர்ப்பனகை, சீதை முதலிய, 12 பெண் பாத்திரங்கள், ராமகதையை ஆட்சி செய்கின்றன’ (பக்.36). காமத்தின் உருவாக, அடிமையாக, அழகுப் பதுமையாக இருந்த பெண்கள், பல்லவர் காலத்தில் தலை நிமிர்ந்தனர்.
இரண்டாம் மனைவியை தேடும் கணவரை வெறுத்தனர். பெண் இனத்தின் மறுமலர்ச்சிக்கு, சமய உலகமும் ஆதரவு தந்தது என்பதற்கு, பெரியபுராணம், திருவாசகத்தை எடுத்துக்காட்டுவது சிறப்பாக உள்ளது.
பாவேந்தரின் கைம்மை திருமணம், மகளிர் கல்வியைக் கூறி, ‘மின்னலை விழுங்கி, மின்சாரத்தைக் கொப்பளித்த கவிஞன்’ என்று போற்றுகிறார். ‘சங்ககாலப் பெண் உரிமை தேடி ஓடிய ஓட்டம் இன்னமும் முடிந்தபாடில்லை’ என்று நூலை முடிக்கிறார்.
காலக் கவிதைக் கண்ணாடியில் அழகு பார்க்கும் பெண்களின், ஆவண நூல்!
முனைவர் மா.கி.ரமணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us