‘பனியன் கம்பெனிக்குப் போற பசங்க, எங்க கபடம் இல்லாம இருக்காங்க...’ என்று கேட்கிறாள் ஒரு தாய்.
படிக்கப் போக வேண்டிய வயதில் பணிக்குச் சென்று அல்லல்படும், ‘டீன்–ஏஜ்’ பையன்களைப் பற்றிச் சொல்லும் நாவல் இது. பள்ளி நாட்களின் நினைவுகளோடும், விடுமுறைக்கால கனவுகளோடும் உலாவும் பிஞ்சுகளின் மனதையும், உடலையும், பல தனியார் தொழில் நிறுவனங்கள் காவு கொள்ளும் கசப்பான உண்மையைச் சொல்லும் கதை.
சம்பாதிக்கும் பணத்தால் திடீரென ஏற்படும் வாழ்வியல் மாற்றத்தையும், மன இறுக்கத்தையும், இயல்பான நடையில் சுப்ர பாரதிமணியன் விவரித்துச் சொல்கிறார். சின்ன வயதிலேயே குடிப்பழக்கம், பெண்களைப் பற்றிய தவறான கண்ணோட்டம் என, பதின்ம வயதுப் பையன்கள் வக்கரித்துப் போவதை, இந்த நாவலில் காணலாம்.
சிறார்களின் உழைப்பும், அதன் சுரண்டலும், வலி மிகுந்த பாடுகளும், எதிர்மறையான விளைவுகளும் என, பல்வேறு சமூக அவலங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
எஸ்.குரு