ஆசிரியர்-வெ.இறையன்பு, வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், 41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600 098.பக்கங்கள்:180. மென்காற்றில் விளை சுகமே எனும் இக்கட்டுரைத் தொகுப்பில் ஏற்படும் தாக்கம் மனிதகுலத்தின் ஆணிவேரினை அசைத்துப் பார்ப்பதாய் உள்ளது. நூலாசிரியர் திரு.இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்களின் படைப்புகளில் இந்நூல் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம். இளைய சமுதாயத்தின் மீதுள்ள அக்கறை எழுத்துகளில் பிரதிபலிக்கின்றது.எங்கோ ஒரு மூலையில் தன்னிலை மறந்து முடங்கிக்கிடக்கும் பாமரனையும் கூடத் தட்டியெழுப்பும் தன்னம்பிக்கைகள் இங்கே விளைந்து கிடக்கின்றன. பொதுவாய்ச் சொல்வது என்பது எளிது.செய்வதுதான் கடினம். எப்படிச் சொல்லிச் செய்ய வைப்பது என்பதை இந்நூல் நன்றாகவே செய்துகாட்டுகிறது.இது வெறும் நூலாய் மட்டுமல்லாமல்; ஒரு மனிதமாகவே தன்னுள்ளுணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டுநிற்பது அலாதி. ஐம்பத்தைந்து கட்டுரைகளும் பயனுள்ளதாகவும்,பலமுள்ளதாகவும் இருப்பது ஆச்சரியம். எந்தப் படைப்பிற்கும் ஒரு மையநோக்குப் பார்வை உண்டு.அந்தப் பார்வை கொண்டால் சொல்லப்படும் விஷயம் வசமாகும். படிக்கும் இதயங்களும் அசைபோடும். அந்த வேலையை இந்நூல் ஆசிரியர் சிறப்பாகவே செய்திருக்கிறார்.