நடைமுறை வாழ்க்கையின் பல்வேறு கூறுகளை, விஞ்ஞானப் பூர்வமாய் அணுகும் வித்தியாசமான பார்வை கொண்டவை, சலீம் படைப்புகள். ‘எய்ட்ஸ்’ எனும் கொடிய நோய் குறித்தும், அது தொடர்பான சமூகப் பார்வை மற்றும் பிரச்னைகள் குறித்தும், சுவாரசியமிகு ஆய்வு ஒன்றை முன்வைத்துள்ள நாவல் இது.
இரண்டு குடும்பங்கள். ஒன்று, மத்தியதர வர்க்கம். இன்னொன்று, அடித்தட்டு வர்க்கம். இரு குடும்பங்களுமே, எய்ட்சால் பாதிக்கப்பட்டவை. ‘எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் இதயம் உண்டு எனும் விஷயத்தை, தயவுசெய்து என்றும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் அளிக்கும் அன்பு, ஆதரவு, அரவணைப்பு, அனுதாபம் இவையெல்லாம் அமுதம் போல் வேலை செய்து, அந்த நோயாளிகளைப் பிழைக்க வைக்கும் சக்திகள்; அருமருந்துகள்.
அவர்கள் சுயமரியாதையுடன் வாழ உங்களால் ஆன உதவி செய்யுங்கள். அவர்களை நீங்கள் நேசிக்காவிடினும் பரவாயில்லை; அருவருக்காதீர்கள். ஆதரிக்காவிட்டாலும் பரவாயில்லை; அவமானத்திற்கு ஆளாக்கி மேலும் காயப்படுத்தாதீர்கள்’ என்ற முக்கியமான செய்தியைச் சொல்லும் உன்னத நாவல்.
எஸ்.குரு