மகாகவி பாரதியாருக்கு, ஒருநாள் அசாதாரணமான சூழ்நிலை ஏற்பட்டது. மனைவி செல்லம்மா வெளியில் போய்விட்டார். குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு பாரதியாருக்கு. குழந்தையிடம், ‘பாட்டுப் பாடட்டுமா’ என்று கேட்கிறார்.
‘இப்போது பாடக் கூடாது. தூங்கும் போது தான் பாட வேண்டும்’ என்று குழந்தை அவருக்குச் சொல்கிறது. குழந்தையின் உலகத்தை விளக்கும் பதிவு இது.
குழந்தைக்குப் பாட்டு எழுதும்போது, குழந்தையின் நிலையில் இருந்து துவங்க வேண்டும். வாள் வீசும் வல்லபங்களுக்கு அங்கே இடமில்லை. குழந்தையின் பாஷையிலேயே தொடர வேண்டும். குழந்தையின் ஆச்சரியத்தோடு அல்லது கேள்வியோடு நிறைவு செய்ய வேண்டும். அப்போது தான் அது பூர்ணமான குழந்தை இலக்கியமாகும்.
பாப்பா ஒன்று எங்க வீட்டில்
முழிச்சிருக்குது – அது
படுத்துக்கிட்டே என்னைப் பார்த்துப்
பார்த்துச் சிரிக்குது
பாப்பா புதுப் பாப்பா – அதோ
படுத்திருக்குது – ஆசு
பத்திரிக்குப் போய் அம்மா தான்
வாங்கி வந்தது
என்று எழுதினார், கவிஞர் தமிழழகன். இது பாப்பாவுக்கான பாட்டு; கலப்படமில்லாதது.‘தமிழ் குழந்தை இலக்கியம் – விவாதங்களும் விமர்சனங்களும்’ என்ற நூலில், இது தொடர்பாகப் பல கோணங்களில் பார்வையை செலுத்தியிருக்கிறார் சுகுமாரன்.
பால விநோதினி, பாலர் முரசு, பாப்பா மலர், அணில், சங்கு, டமாரம், டிங் – டாங், கரும்பு, பார்வதி, அம்பி, முத்து, கண்ணன், சின்னக் கண்ணன், முயல், மயில், கிளி, பூஞ்சோலை, சிறுவர் உலகம், ஜில்ஜில், மத்தாப்பு, ரத்னபாலா, பூந்தளிர், தமிழ்ச் சிட்டு, அம்புலி மாமா, கோகுலம் போன்ற சிறுவர் இதழ்கள், பத்தாண்டுகளுக்கு முன் இருந்தன என்கிறர் அவர் (பக்.3).
ஆனால் இப்போது? குழந்தைகளின் கவனம் எங்கே இருக்கிறது?
‘சூப்பர் சிங்கர் பாட்டுப் போட்டிகளால், சினிமா பாடல்களைத் தான் குழந்தைகள் பாடுகின்றனர். பாடல்களுக்கு இடையே வரும் முக்கல், முனகல் ஒலியையும் சேர்த்து, யார் நன்றாக முனகுகின்றனர் என்பதைப் பொறுத்து, அதிக மதிப்பெண்கள்’ என்கிறார், நூலாசிரியர் (பக்.10)
கற்பித்தலில் குழந்தை இலக்கியம், குழந்தை இலக்கியத்தில் வாழ்க்கை வரலாறு, குழந்தைகளும் நாடகமும் என்றெல்லாம் விரிவாக எழுதியுள்ளார். அவசியமான நூல் இது.
சுப்பு