கோவை, சேலம், ஈரோடு பகுதிகளில் நடந்த கொலைகள் பற்றிய, 14 பாடல்களைப் பதிவு செய்து, ஆய்வு நூலாக வழங்கிய நூலாசிரியர் முயற்சி பாராட்டிற்கு உரியது. கிராமியப் பழங்கலையை மீட்டுருவாக்கம் செய்கிறார் நூலாசிரியர். ஏறக்குறைய முற்றிலும் ஆதரவின்றி அழிந்து வருகிறது. இந்த தெருப்பாடல் கலை, ‘கொலைச்சிந்து!’அம்மானை, கும்மி, வில்லுப்பாட்டு, உடுக்கடிப் பாட்டு போன்றவை குழுக்களாகப் பாடப்படுபவை. இந்த கொலைச்சிந்து, ‘டேப்’ அடித்து தனியே நின்று பாடுவது. தகாத புணர்ச்சி, கள்ளக்காதல், கற்பழிப்பு, பரத்தைமை, காதல் சார்ந்தவை, 11 கொலைச் சிந்துகள். வறுமை, குடும்பத் தகராறு, போக்கிரிகள், திருட்டு சார்ந்தவை மீதமுள்ளவை.
முதலில் தவறு செய்தோரின் தூண்டுதலால், நல்லவர்கள் கொல்லப்படுவதும், முடிவில் காவல்துறையிடம் சிக்கி கொலைகாரர்கள் தண்டனை பெறுவதும் பாடப்படுகிறது. கள்ளத் தொடர்புள்ள பெண்ணுக்கு, வேறொரு கல்யாணம் காலையில் நடக்கிறது. மாலை அவளுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. சேலம் கூட்டூரில் இது நடக்கிறது. நூலில், ‘தேசம் போற போக்கைப் பாரு தங்கமத்தில்லாலே’ என்ற தெம்மாங்கு காதில் ஒலிக்கிறது. கொலையையும் கலையாகப் பாடும் அருமை நூல்.
– முனைவர் மா.கி.ரமணன்